காஜூ-மஸ்ரூம் மசாலா : செய்தவுடனே காலியாகிவிடும் காஜூ – மஸ்ரூம் மசாலா; செம்ம டேஸ்டியான ரெசிபி இதோ!
காஜூ-மஸ்ரூம் மசாலா : காஜூவையும், மஸ்ரூமையும் வைத்து ஒரு மசாலாவை இப்படி செய்து பாருங்கள். அது செய்தவுடனே காலியாகிவிடும்.

முந்திரியுடம், காளானையும் சேர்த்து ஒரு மசாலா செய்வது எப்படி என்று பாருங்கள். நல்ல சுவையான மசாலா. இதை சப்பாத்தி, ரொட்டி, பராத்தாக்களுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை செய்வதும் எளிது. குறிப்பாக காளான் பிரியர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க
• தக்காளி – 3
• தேங்காய்த் துருவல் – அரை கப்
• ஊறவைத்த முந்திரி – 15 முதல் 20 வரை
(ஒரு மிக்ஸி ஜாரில் இந்த மூன்றையும் சேர்த்து மிருதுவாக அரைத்துவைத்துக்கொள்ளவேண்டும்)
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
• எண்ணெய் – 6 ஸ்பூன்
• முந்திரி – 20 (நெய்யில் வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்)
• காளான் – 400 கிராம்
• உப்பு – தேவையான அளவு
• மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
• கஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
• மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
• கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
• ஃபிரஷ் கிரீம் – 2 டேபிள் ஸ்பூன்
• கசூரி மேத்தி – 2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை – கைப்பிடியளவு
செய்முறை
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், காளானை சேர்த்து சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் தூவி வதக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். மஸ்ரூமில் இருந்து தண்ணீர் பிரிந்து வரும் வரை வதக்கினால் போதும். அதிகம் வேகத் தேவையில்லை.
2. அடுத்து எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் பெரிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
3. அடுத்து அரைத்த முந்திரி, தேங்காய், தக்காளி மசாலா சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து உப்பு, கஷ்மீரி மிளகாய்த் தூள், மல்லித்தூள், இஞ்சி-பூண்டு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
4. அதில் எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் காளானை சேர்த்த போதிய அளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது, கிரீம், மல்லித்தழை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையான காஜூ-மஸ்ரூம் மசாலா தயார்.
இதை சப்பாத்தி, ரொட்டி, நாண், பரராத்த, பரோட்டவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
