தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cancer Ratio : புற்றுநோய் – இந்தியா மற்றும் வெளிநாட்டினருக்கு உள்ள வேற்றுமை – ஒரு ஒப்பீடு!

Cancer Ratio : புற்றுநோய் – இந்தியா மற்றும் வெளிநாட்டினருக்கு உள்ள வேற்றுமை – ஒரு ஒப்பீடு!

Priyadarshini R HT Tamil
Apr 07, 2024 06:55 AM IST

Cancer Ratio : புற்றுநோய் பாதிப்பில் வெளிநாட்டவருக்கும், நம் நாட்டவருக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?

Cancer Ratio : புற்றுநோய் – இந்தியா மற்றும் வெளிநாட்டினருக்கு உள்ள வேற்றுமை – ஒரு ஒப்பீடு!
Cancer Ratio : புற்றுநோய் – இந்தியா மற்றும் வெளிநாட்டினருக்கு உள்ள வேற்றுமை – ஒரு ஒப்பீடு!

ட்ரெண்டிங் செய்திகள்

2021-22ம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியாவில் புதிதாக 13,92,179 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் தமிழகத்தில் புதிதாக 81,814 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களே, ஆண்களைக் காட்டிலும், அதிக புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

தமிழகத்தில் ஆண்களில் 13 பேரில் ஒருவருக்கும், பெண்களில் 11 பேரில் ஒருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் ஏற்படும் சராசரி வயது, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் குறைவாக உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்தில் மார்பக புற்றுநோய் ஏற்படும் சராசரி வயது 63 என உள்ளது. இந்தியாவில் அது 52 வயது எனக் குறைவாக உள்ளது.

நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் சராசரி வயது மேற்கத்திய நாடுகளில் 70 என இருக்க, இந்தியாவில்அது 59 எனக் குறைவாக உள்ளது.

லண்டனைச் சேர்ந்த Influence Map எனும் நிறுவனம் செய்த ஆய்வில், உலக அளவில் கரியமிலவாயுவை அதிகம் வெளியிட்டு 3ம் இடத்தில் இருப்பது நிலக்கரி இந்தியா நிறுவனம் (CIL) ஆகும். (பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பின்னும் உலகளவில் 3 சதவீதம் கரியமிலவாயுவை அதிகளவில் வெளியிட்டு Coal India Ltd, உலகளவில் 3ம் இடத்தில் உள்ளது) இது நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது.

இந்தியாவில் சமீப காலமாக இளம் வயதில், புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டும், அதை ஆரம்பத்தில் கண்டறியும் பரிசோதனைகள் (Screening tests) மிகக் குறைவாகவே இங்கு மேற்கொள்ளப்படுகிறது.

மார்பக புற்றுநோய் – 52 வயது (சராசரி)

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் - Cervical cancer – 54 வயது (சராசரி)

நுரையீரல் புற்றுநோய் – 59 வயது (சராசரி)

என புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் உள்ளது. இத்தகைய புற்றுநோய்கள் ஏற்படும் சராசரி வயது மேற்கத்திய மேலை நாடுகளில் அதிகமாக உள்ளது.

30 சதவீத பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer), 50 வயதிற்கு கீழானவர்களை இந்தியாவில் தாக்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிய தனியாக பரிசோதனைகள் (Screening tests) அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அது குறைவு.

எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் மார்பக புற்றுநோய் உள்ளதா? என கண்டறியும் ஆரம்ப கட்ட பரிசோதனைகள், 74-82 சதவீதம் மக்களிடம் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் அது 1.9 சதவீதம் மக்களிடம் மட்டுமே (மிகக் குறைவாக) மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் புற்றுநோய் போன்ற தொற்றாநோய்களின் காரணமாகவே 70 சதவீதம் இறப்புகள் நிகழ்கின்றன.

புரோஸ்டிரேட் (Prostrate Cancer) புற்றுநோயை பொறுத்தமட்டில், அதை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய உதவும் Prostrate Specific Antigen-PSA அளவு வெளிநாட்டவருக்கும், நம் நாட்டவருக்கும் வேறுபாடு உள்ளது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் (நமதுநாட்டில் அதன் அளவு, வெளிநாட்டவரை ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும் சமயத்தில் கூட பாதிப்பு அதிகமாக உள்ளது) உள்ளூர் ஆய்வுகள், புள்ளிவிவரங்கள் நமது நாட்டிற்குத் தேவை.

சர்க்கரைநோய் பாதிப்பின் முந்தைய நிலை (Pre-Diabetes) 3ல் 1 இந்தியருக்கு உள்ளது.

உடல்பருமன் அதிகரித்தல் சர்க்கரைநோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துவதால், உணவுமுறை மாற்றம் (நார்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது), உடற்பயிற்சி போன்றவை நோய் தடுப்பில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதை அரசும், மக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆரம்ப கட்ட புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் (குறிப்பாக கிராமப்புறங்களில்) கிடைக்கச் செய்வது அரசின் கடமையாக இருக்க வேண்டும். தற்போது அது நகர்புறங்களில் மட்டும், குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் சூழல் உள்ளது.

வருமுன் காப்பது சிறந்தது என்பதால் புற்றுநோயை ஏற்படுத்தும் சூழல் காரணங்களை, குறிப்பாக ஆலைக் கழிவுகளை (எடுத்துக்காட்டு ஸ்டெர்லைட்) முறையாக கண்காணித்து அவை கட்டுக்குள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

அரசு, உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமா?

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில், வேலைவாய்ப்பின்மை 35 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக (இருமடங்காக) உயர்ந்துள்ளது.

83 சதவீதம் வேலையில்லாதவர்கள் இள வயதினர் (Youth).

பட்டப்படிப்பை நிறைவு செய்த 42 சதவீதம் பேருக்கு வேலையில்லை.

உயர் கல்வி நிறுவனத்தில் (IIT)படித்து முடித்த 30 சதவீதம் பேருக்கு வேலையில்லை.

இந்த புள்ளிவிபரங்கள் அரசு மக்கள் மீது அக்கறையற்று செயல்படுகின்றன என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்