நட்ஸ்கள் மற்றும் வாழைப்பழத்தை வைத்து ஒரு அல்வா கிண்டலாமா? தித்திக்கும் தீபாவளி ஸ்பெஷல்!
நட்ஸ்கள் மற்றும் வாழைப்பழத்தை வைத்து ஒரு அல்வா கிண்டலாமா? வாயில் வைத்ததும் வழுகிக்கொண்டு ஓடும் பதத்தில் செய்து அசத்தலாம். தித்திக்கும் தீபாவளி ஸ்பெஷல்!
தீபாவளிக்கு தயாராகிவிட்டீர்களா? புத்தாடை, பட்டாசெல்லாம் வாங்கியாச்சா? இனி என்ன பலகாரம் செய்யவேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? புதிதாக என்ன செய்யலாம்? வித்யாசமாக என்ன செய்யலாம்? ஆரோக்கியமாக என்ன செய்யலாம்? அத்தனை யூடியூப் சானல்கள், ரீல்ஸ்களிலும், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று எண்ணற்ற ரெசிபிக்கள் கொட்டிக்கிடக்கிறது. இத்தனைக்கும் மத்தியில்தான் என்ன செய்யலாம் என்று குழம்பியிருக்கிறீர்களா? இதோ இந்த தீபாவளிக்கு செய்து அசத்த வாழைப்பழ அல்வா வாயில் வைத்ததும் வழுக்கிக்கொண்டு ஓடும் பதத்திலும், சூப்பர் சுவையிலும் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பழுத்த இனிப்பான வாழைப்பழம் – 7
(பூவன், ரஸ்தாளி, நாட்டுப்பழம் இதில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்)
சர்க்கரை – தேவையான அளவு
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 10
திராட்சை – ஒரு டேபிள் ஸ்பூன்
பிஸ்தா – 10
முந்திரி – 10
கார்ன் ஃப்ளார் – 5 டீஸ்பூன்
செய்முறை
வாழைப்பழத்தின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்க்காமல் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கிக்கொள்ளவேண்டும். (இந்த வாழைப்பழ அல்வா செய்வதற்கு நான்ஸ்டிக் கடாயை தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது) அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும். அதே கடாயில் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இதை கலவை கெட்டியாக வரும்வரை நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். வாழைப்பழம் இறுகி வரும் பதத்திற்கு வந்ததும், பழத்தின் இனிப்பிற்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.
இனிப்பு பத்தவில்லையென்றால், மீண்டும் சர்க்கரை சேர்த்து கிளறவேண்டும். ஒரு கிண்ணத்தில் கார்ன் மாவை நீர் விட்டுக் கரைத்து அல்வாவில் ஊற்றிக் கிளறவேண்டும். நெய்யை ஒவ்வொரு ஸ்பூனாகத்தான் சேர்க்கவேண்டும்.
3 நிமிடங்களுக்கு ஒரு முறை என 4 முறை ஒரு ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவேண்டும். அல்வா பிசைந்து வைத்த பூரி மாவு பதத்திற்கு வரும்போது அல்வாவில் இருந்து நெய் பிரியும், அதற்குப் பிறகு நாம் நெய் சேர்க்கத் தேவையில்லை.
நெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி திராட்சையை இதில் சேர்த்து நன்றாக அது கலக்கும்படி கிளறி இறக்கிவைக்கவேண்டும். ருசியான வாழைப்பழ அல்வா தயார்.
இதை அப்படியே சூடாகவும் சாப்பிடலாம அல்லது ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து துண்டுகளாகப் போட்டும் சாப்பிடலாம். ஒரே ஒரு முறை சூடான வாழைப்பழ அல்வாவுடன் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம்.
குறிப்புகள்
பழுத்த இனிப்பான வாழைப்பழங்கள் எதிலும் இந்த அல்வாவைச் செய்யலாம்.
நீங்கள் சர்க்கரைக்கு பதில் வெல்லம், பனை வெல்லம், கருப்பட்டி போன்ற இனிப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கார்ன் மாவு சேர்ப்பது அவசியமல்ல. அது சேர்க்காமலும் செய்யலாம். ஆனால் அதை சேர்ப்பது ஒரு சரியான அல்வா பதத்தை தரும் என்பதால் சேர்த்து செய்யும்போது சுவையும் மாறுபடும்.
கார்ன் ஃப்ளாருக்கு பதில் கொஞ்சம் பால் மற்றும் மில்க் மெய்ட் கலந்தும் இதைச் செய்யலாம். வாழைப்பழ அல்வாவைச் செய்து இந்த தீபாவளியை தித்திக்கும் தீபாவளியாக மாற்றுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்