தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Black Urad Tomato Chutney : தளதளன்னு தக்காளி - கருப்பு உளுந்து கார சட்னி! இட்லி, தோசைக்கு அடிதூள் காம்போ!

Black Urad Tomato Chutney : தளதளன்னு தக்காளி - கருப்பு உளுந்து கார சட்னி! இட்லி, தோசைக்கு அடிதூள் காம்போ!

Priyadarshini R HT Tamil
Mar 24, 2024 11:14 AM IST

Black Urad Tomato Kara Chutney : கருப்பு உளுந்து தக்காளி கார சட்னி செய்வது எப்படி?

Black Urad Tomato Chutney : தக்காளி - கருப்பு உளுந்து கார சட்னி! இட்லி, தோசைக்கு அடிதூள் காம்போ!
Black Urad Tomato Chutney : தக்காளி - கருப்பு உளுந்து கார சட்னி! இட்லி, தோசைக்கு அடிதூள் காம்போ!

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 3

உடைத்த கருப்பு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்

கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு

ட்ரெண்டிங் செய்திகள்

மிளகாய் வற்றல் - 8

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கல் உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவேண்டும். தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

கடாயில் அரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன், கருப்பு உளுத்தம்பருப்பை சேர்த்து நன்றாக சிவந்து வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். பின் ஒரு தட்டில் மாற்றி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தை வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.

அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானவுடன், சின்ன வெங்காயத்தை சேர்த்து மிதமான சூட்டில் சிவந்து வரும் வரை வதக்கவேண்டும். பின்னர் தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

அதே கடாயில் எஞ்சிய எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவேண்டும். தக்காளி நன்றாக குழைத்து வதங்கியதும் அடுப்பை அணைத்து தட்டில் மாற்றிக் கொள்ளவேண்டும்.

சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்க வேண்டும். வதக்கிய பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வறுத்த மிளகாய் வற்றல் மற்றும் வதக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும். பின்னர் வதக்கிய தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும்.

கடைசியாக வறுத்து வைத்துள்ள பெருங்காயம் மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின் கிண்ணத்தில் மாற்றி சிறிது தண்ணீர் விட்டு அலசி கலந்துகொள்ளவேண்டும்.

பின்னர் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்க வேண்டும்.

இட்லி, தோசை இரண்டுக்கும் தொட்டுக்கொள்ள இது மிகவும் நன்றாக இருக்கும். சூடான நெய் தோசை, மசாலா தோசை, பொங்கல், உப்புமா என அனைத்துக்கும் நன்றாக இருக்கும்.

நன்றி – விருந்தோம்பல்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.

இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.

இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.