கத்தரிக்காய் – தேங்காய் தொக்கு; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஷ்!
கத்தரிக்காய் – தேங்காய் தொக்கு; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஷ்!
கத்தரிக்காயின் நன்மைகள் என்னவென்று முதலில் பார்க்கலாம். கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும். அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும். ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது. இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது. கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.
கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய். இத்தனை நன்மைகள் நிறைந்த கத்தரிக்காயில் தொக்கு செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை – சிறிதளவு
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சோம்பு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கரம் மசாலாப் பொடி – சிறிதளவு
செய்முறை
கத்திரிக்காயை கழுவி விட்டு காம்பை நறுக்கிவிடவேண்டும். தேங்காய்த் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, வெங்காயத்தாள், பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். இதை ஆறவைத்து, இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வதக்கி அரைத்த விழுதை முதலில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது கத்திரிக்காயை சேர்த்து பிரட்டவேண்டும்.
அடுத்து, மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்கவிவேண்டும். மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான கத்தரிக்காய் – தேங்காய் தொக்கு தயார்.
இதை சம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், கீரை சாதம் போன்ற வெரைட்டி சாதங்கள் மற்றும் சப்பாத்தி, இட்லி, தோசை என டிபஃன் வகைகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
கத்தரிக்காயில் தேங்காய் சேர்த்து செய்யப்படும் இந்த தொக்கு உங்களுக்கு சூப்பரான சுவையைத்தரும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்கத் தூண்டும் அத்தனை ருசியானதாக இருக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகின்றன. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்