மார்பக புற்றுநோய் : மார்பக புற்றுநோய் தலைநகராகும் சென்னை! கேள்விக்குறியாகும் பெண்கள் ஆரோக்கியம் – மருத்துவர் பேட்டி!
மார்பக புற்றுநோய் : சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மார்பக புற்றுநோய் அதிகம் உள்ளது என்பது ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. எனவே மாற்றத்தகுந்த காரணிகளான சூழல் காரணிகள் குறித்து நாம் அதிகம் பேச வேண்டிய நிலை உள்ளது.

பெண்களின் இறப்பை தடுக்கும் முக்கியமான காரணி என்னவென்று பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இந்த உலக மகளிர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் இருக்கிறோம். இந்தியாவிலேயே அதிகளவில் மார்பகப் புற்றுநோய் சென்னையில்தான் அதிகம் உள்ளது. இது 32.5 சதவீதம் உள்ளது. 19 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். ஒரு லட்சம் பெண்களில் 52 பேருக்கு மார்பகப் புற்றுநோய் சென்னையில் ஏற்படுகிறது. எனவே கட்டாயம் இதுகுறித்து நாம் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மக்கள் மற்றும் அரசு இரு தரப்பு முன்னெடுப்புகளும் இருக்கவேண்டும். தமிழக அளவில் இறப்பு குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், இந்தியாவிலேயே மார்பக புற்றுநோய் பாதிப்பு சென்னையில்தான் அதிகம் உள்ளது. நகர்புறத்தைவிட கிராமப்புறங்களில் அது குறைவாக உள்ளது.
இதனை நம்மிடம் விரிவாக விளக்குகிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி. அவர் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் விவரம் இதோ
மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள்
மார்பக புற்றுநோய் 45ஐ கடந்துதான் ஏற்படும். ஆனால் 2023ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அது 25 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மத்தியில் அது 7 சதவீதம் (கடந்த 15 ஆண்டுகளில்) அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அது 1.5 சதவீதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.