HT Tamil Book SPL: குஜராத் முதல் குமரிமுனை வரை.. இந்தியப் பயணங்களை அழகாக விவரிக்கும் புத்தகம்!
ரயில் பிரயாணம், திருடர்கள் ஜாக்கிரதை, வடநாட்டுப் பயணம் என இவரது கட்டுரைகளில் யதார்த்தம் இழையோடுகிறது. கோவா பற்றி அவர் எழுதியுள்ளவை நமக்கு இதுவரை தெரியாத பக்கங்கள். செஞ்சி கோட்டைக்குச் சென்ற அனுபவத்தையும் குமரிமுனை சென்ற அனுபவத்தையும் மிக அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர் ஏ.கே.செட்டியார்.

ஏ.கே.செட்டியார் எழுதிய 'இந்தியப் பயணங்கள்' நூல் குறித்துதான் இதில் படித்து தெரிந்து கொள்ளப் போகிறோம். தமிழில் பயண எழுத்தாளர்களில் முன்னோடி ஏ.கே.செட்டியார் தான். இவர் எழுதிய பயணக் கட்டுரைகள் அடங்கிய நூல், ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அதேபோல், அந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘இந்தியப் பயணங்கள்’ எனும் நூலும் அதே பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல், அவர் இந்தியா முழுவதும் பயணித்தபோது எதிர்கொண்ட அனுபவங்களைக் கொண்டுள்ளது.
செட்டிநாடு கோட்டையூரில் 4.11.1911-இல் பிறந்த ஏ.கே.செட்டியார் 40 ஆண்டு காலம் 'குமரி மலர்' என்ற மாத இதழையும் நடத்தியவர் ஆவார். தேசப்பிதா மகாத்மா காந்திஜி குறித்த ஆவணப்படத்தையும் இயக்கியவர். இந்த ஆவணப்படம் எடுக்க பல உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்கள் அடங்கிய நூல் தான் 'உலகம் சுற்றும் தமிழன்'.
‘திருவண்ணாமலையில், ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்று சமுத்திரத்தைப் பார்க்காத மாணவர்கள் கையை உயர்த்துங்கள் என்றால் பாதிப்பேர் கையை உயர்த்துவார்கள்’ என இவர் பிரயாணம் செய்யுங்கள் என்ற தலைப்பில் எழுதியுள்ள முதல் கட்டுரையின் முதல் வரியிலிருந்து நமக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது 'இந்தியப் பயணங்கள்' நூல்.
ரயில் பிரயாணம், திருடர்கள் ஜாக்கிரதை, வடநாட்டுப் பயணம் என இவரது கட்டுரைகளில் யதார்த்தம் இழையோடுகிறது. கோவா பற்றி அவர் எழுதியுள்ளவை நமக்கு இதுவரை தெரியாத பக்கங்கள். செஞ்சி கோட்டைக்குச் சென்ற அனுபவத்தையும் குமரிமுனை சென்ற அனுபவத்தையும் மிக அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர் ஏ.கே.செட்டியார்.
'அதிசயமான ஊற்று'
அதிசயமான ஊற்று என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள கட்டுரை நமக்கு தெரியாமல் இன்னும் எத்தனை இடங்கள் இந்நாட்டில் உள்ளன என்பதை எண்ணத் தோன்றும். உலக நாடுகளை சுற்ற முடியாவிட்டாலும் நமது நாட்டையாவது சுற்றுங்கள். அதுவும் முடியவில்லை என்றாலும் பல அதிசயங்களை தன்னுள்ளே மறைத்து வைத்துள்ள தமிழ்நாட்டையாவது சுற்றுங்கள் என இவர் இந்நூலில் வலியுறுத்தியுள்ளார்.
இப்போதுள்ளது போல் அப்போதெல்லாம் போக்குவரத்துக்கு பெரிய வசதி இல்லாத காலம் எனும் நிலையில், மாட்டு வண்டியில் இவர் பயணித்த அனுபவத்தை நாம் படிக்கும்போது நாமும் மாட்டு வண்டியில் பயணிப்பதை போன்று நினைத்துக் கொள்வோம்.
ஒவ்வோர் இடத்துக்குச் சென்று தனக்கு பெற்ற அனுபவத்துடன் அந்த இடத்தின் வரலாற்றையும் மேலோட்டமாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். இதன்மூலம், நமக்கு அந்நகர் குறித்து ஓரளவுக்கு வரலாற்றையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல், எந்த இடத்துக்கு நாம் சென்றாலும் அந்த இடத்தின் வரலாற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்கு விதைக்கிறது.
நூலின் விலை?
'தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தை கட்டுரைகள்' எனும் ஏ.கே.செட்டியார் திரட்டித் தொகுத்த நூலையும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். தமிழ்நாட்டை தாண்டி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு ‘இந்தியப் பயணங்கள்’ ஒரு சிறந்த வழிகாட்டியாகும். ஆனால், இந்நூல், அந்தக் காலத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதால் இவரது அனுபவத்தையும் அந்த இடத்தின் வரலாற்றையும் நாம் தெரிந்துக கொள்ளலாமே தவிர, போக்குவரத்து விவரங்களை தற்காலத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது.
இந்நூலின் விலை ரூ.115. சந்தியா பதிப்பகத்தின் வலைத்தளத்திலும் இந்நூலை வாங்கலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்