Black Urad Chutney : பெண்களுக்கு மிகவும் அவசியம்! கருப்பு உளுந்தில் இப்படி ஒரு சட்னி! செய்து அசத்த இதோ ரெசிபி!
Black Urad Chutney : பெண்களுக்கு மிகவும் அவசியம். கருப்பு உளுந்தில் இப்படி ஒரு சட்னி செய்ய முடியும். செய்து அசத்த இதோ ரெசிபி.
கருப்பு உளுந்து பெண்களுக்கு மிகவும் அவசியமான உணவாகும். தோல் நீக்கப்பட்ட உளுந்துதான் இப்போது சந்தையில் கிடைக்கிறது. ஆனால், தோல் சேர்த்து இருக்கும் தானியங்கள்தான் உடலுக்கு அதிக நன்மைகளைத் தருகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
எனவே தோலுடன் உளுந்தை சேர்ப்பது நல்லது. நாம் முழு தோல் உளுந்தை பயன்படுத்தவேண்டும். சப்பாத்திக்கு பாசிபருப்பு தால் செய்யும்போது, அதனுடன் பாதியளவு தோல் உளுந்தை சேர்த்துக்கொள்ளும்போது, பெண்களுக்கு ஹார்மோன்களை சமப்படுத்த உதவுகிறது.
வெள்ளை உளுந்தை வாங்கி பயன்படுத்துவதை குறைத்து, தோலுடன் உள்ள உளுந்தை பயன்படுத்தவேண்டும்.
கருப்பு உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கருப்பு உளுந்து – கால் கப்
வெள்ளை உளுந்து – கால் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பூண்டு – 8 பல்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
வர மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன எண்ணெய் சேர்த்து அதில் கருப்பு உளுந்துடன் சிறிது வெள்ளை உளுந்தையும் சேர்த்து வறுக்கவேண்டும். வெள்ளை உளுந்தும் சிறிதளவு சேர்க்க காரணம், அப்போதுதான் கறுப்பு உளுந்து சிவந்துவிட்டதா என்பது தெரியவரும்.
அது நன்றாக சிவந்தவுடன், கறிவேப்பிலை, புளி, மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியவுடன் எடுத்து நன்றாக ஆறவிடவேண்டும்.
பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சட்னியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து, இந்த சட்னியில் சேர்க்கவேண்டும்.
சூப்பர் சுவையில் கருப்பு உளுந்து சட்னி தயார்.
இதை இட்லி, தோசை, ஊத்தப்பம், உப்புமா, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
கருப்பு உளுந்தின் நன்மைகள்
சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.
கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.
கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.
கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.
உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.
உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.
எலும்புகளை வலுவாக்குகிறது.
மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.
உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.
உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்