Bisibelabath Powder : பிசிபேலாபாத் பிரியரா? இந்த பொடிய மட்டும் சேர்த்து செஞ்சு பாருங்க! இதோ ரெசிபி! செய்து அசத்துங்கள்!
Bisibelabath Powder : பிசிபேலாபாத் பிரியரா நீங்கள்? அதற்கு இந்த பொடியை மட்டும் சேர்த்து செஞ்சு பாருங்க. அசத்தலான சுவையில் இருக்கும். இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்
கொப்பரை தேங்காய் – ஒரு கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 4 கொத்து
வர மிளகாய் – 15 – 20 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகரித்து அல்லது குறைத்துக்கொள்ளலாம்)
வரமல்லி – கால் கப்
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
மராத்தி மொக்கு – 10
பட்டை – 5
ஏலக்காய் – 10
வெந்தயம் – அரை ஸ்பூன்
செய்முறை
கொப்பரை தேங்காய், கறிவேப்பிலை, வரமிளகாய், மல்லி, உளுந்து, கடலை பருப்பு, சீரகம், கசகசா, மராத்தி மொக்கு, பட்டை, ஏலக்காய், வெந்தயம் என அனைத்தையும் தனித்தனியாக பொன்னிறமாக மணம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் ஆறவைத்து அனைத்தையும் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஒரு காற்றுப்புகாத டப்பா அல்லது பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
பிசிபேலாபாத் பொடிக்கு கட்டாயம் கொப்பரைத் தேங்காயைத் தான் பயன்படுத்தவேண்டும்.
இந்தப் பொடியை நீங்கள் தினம் வைக்கும் சாம்பாரிலும் சேர்த்துக்கொள்ளலாம். சாம்பார் கூடுதல் சுவை நிறைந்ததாக இருக்கும்.
இந்தப் பொடியை பயன்படுத்தி பிசிபேலாபாத் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
துவரம் பருப்பு – அரை கப்
பாசிபருப்பு – 2 ஸ்பூன்
கேரட் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – ஒரு கப் (தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10 – 15
முருங்கைக்காய் – 1 (சாம்பாருக்கு நறுக்குவதைவிட சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
வறுத்து அரைத்து வைத்துள்ள பிசிபேலாபாத் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிக்கரைசல் – அரை கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – 4 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
வரமிளகாய் அல்லது குண்டு மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
அரிசி மற்றும் பருப்புகளை சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். பின்னர் ஒரு குக்கரில் ஊறவைத்த அரிசி, பருப்புட வெங்காயம் தவிர மற்ற காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் அதிகமாகவே தண்ணீர் சேர்த்து நன்றாக குழையும் அளவுக்கு தேவையான விசில் விட்டு இறக்கிக்கொள்ளவேண்டும். பிசிபேலாபாத்துக்கு சாதம் நல்ல குழைவாக இருக்கவேண்டும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவேண்டும்.
பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து அது பொன்னிறமானவுடன், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். அரைத்து வைத்துள்ள பிசிபேலாபாத் பொடியைத் தூவி நன்றாக வதக்கவேண்டும். புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் அதில் வேகவைத்த சாதத்தை தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நல்ல குழைவாக சமைத்து எடுக்கவேண்டும். சூப்பர் சுவையில் பிசிபேலாபாத் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள காராபூந்தி மட்டுமே போதும். வேறு எதுவும் தேவையில்லை. வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

டாபிக்ஸ்