சென்னையில் இரவு நேர அதிகபட்ச வெப்பம் அதிக உயர்வு - முக்கிய காரணங்கள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சென்னையில் இரவு நேர அதிகபட்ச வெப்பம் அதிக உயர்வு - முக்கிய காரணங்கள் என்ன?

சென்னையில் இரவு நேர அதிகபட்ச வெப்பம் அதிக உயர்வு - முக்கிய காரணங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Updated Jun 22, 2025 02:07 PM IST

சென்னையின் தற்போதைய வனப்பரப்பு 5.28 சதவீதம் மட்டுமே. விதிகளின் படி அது 33.3 சதவீதமாக இருக்க வேண்டும். டெல்லி, ஹைதராபாத்தில் அது 12 சதவீதம் என உள்ளது.

சென்னையில் இரவு நேர அதிகபட்ச வெப்பம் அதிக உயர்வு - முக்கிய காரணங்கள் என்ன?
சென்னையில் இரவு நேர அதிகபட்ச வெப்பம் அதிக உயர்வு - முக்கிய காரணங்கள் என்ன?

20 ஆண்டுகளில் இரவு நேர சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 1.5°C உயர்ந்துள்ளது. 2001ல் 23°C என இருந்தது 2021ல் 24.5°C ஆக உயர்ந்துள்ளது.

இதனால் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்.

சென்னையை பொருத்தமட்டில் கடற்கரைக்கு அருகில் இருப்பதால் ஈரப்பதத்தின் அளவும் சமீப காலமாக 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 30-60 சதவீத ஈரப்பதம் இருந்தால் உடல் நலம் அதிகம் பாதிக்காது. அதிக ஈரப்பதம் காரணமாக 6.3°C வரை வெப்ப அழுத்தம் அதிகரிக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சென்னையின் அதிக ஈரப்பதம் காரணமாக, உடல் வியர்வை மூலம் வெப்பத்தை இழக்க முடியாமல் போய் உடலில் நோய்கள் ஏற்படுகிறது.

இரவு நேர அதிக வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்

1) இறப்பு விகிதம் 30°Cக்கு அதிகமாக இருந்தால் 2 மடங்கு அதிகமாகிறது.(அகமதாபாத் ஆய்வு முடிவு)

2)வெப்ப அழுத்தம்,உடல் சோர்வு, நீர்சத்துக் குறைவு- அதனால் ஏற்படும் பாதிப்புகள்

3)இருதயநோய்,

நுரையீரல்நோய்,சிறுநீரகக் கோளாறுகள்,சர்க்கரைநோய் இருந்தால்,அவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும்.

4)உறக்கமின்மை- அதன் காரணமாக எழும் பிற பாதிப்புகள்

5)மன அழுத்தம்.

6) பாரிச வாதம்(Stroke)

7)நோய் எதிர்ப்புசக்தி குறைவு

போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும்.

இரவு நேர அதிகபட்ச வெப்ப உயர்விற்கு முக்கிய காரணங்கள்

பசுமைப்பரப்பு குறைவு - சென்னையில் 2003ல் 34.2 சதவீதம் இருந்த பசுமைப்பரப்பு 2023ல் 20.5 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.

கான்கிரீட் பரப்பு அதிகம். சாலை விரிவாக்கம்.

2003ல் 31.6 சதவீதமாக இருந்தது 2023ல் 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. 4ல் 3 பங்கு பகுதி கான்கிரீட் தளமாக இருந்து மரங்கள் இல்லாத சூழலை உருவாக்குகிறது.

1991-2016 இடைப்பட்ட காலத்தில் 70 சதவீத ஈரநிலங்கள் சென்னையில் பறிபோயுள்ளது. 70 சதவீத கான்கிரீட் பரப்பு அதிகமாகியுள்ளது.

நீர்நிலைகளின் பரப்பு 50 சதவீத குறைந்துள்ளது. பசுமைப்பரப்பு 34 சதவீத குறைந்துள்ளது.

2000-2020 இடைப்பட்ட காலத்தில் 118 ஹெக்டேர் பரப்பு மரங்கள் காணாமல் போயுள்ளது.

சென்னையின் தற்போதைய வனப்பரப்பு 5.28 சதவீதம் மட்டுமே. விதிகளின் படி அது 33.3 சதவீதமாக இருக்க வேண்டும். டெல்லி, ஹைதராபாத்தில் அது 12 சதவீதம் என உள்ளது.

ஆக வெப்ப தீவு விளைவாகவே சென்னையின் இரவு நேர அதிகபட்ச வெப்பம் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடற்கரைக்கு அருகில் இருப்பதால் ஈரப்பதம் 5 சதவீதம் உயர்ந்து, அதன் காரணமாக வெப்பம் அதிகம் தேக்கப்பட்டு இரவில் வெளியாவதால் இரவுநேர வெப்பம் உயர்கிறது.

தாமதமான கடற்காற்று,இரவு நேரங்களில் கடற்காற்று அதிகம் இல்லாமை.

வாகனங்கள், ஆலைக்கழிவுகள் காரணமாக எழும் கருப்பு கார்பன் அதிக வெப்பத்தை உள்வாங்கி இரவில் அதிகம் வெளியிடுவது.

சென்னையில் நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுவது. சென்னையில் உள்ள 51 பர்காக்களில் 46 இடங்களில் நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுகிறது. (அது உள்வாங்கும் திறனை விட அதிகம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது - Overexploitation) இதனால் மண்ணின் ஈரப்பதம் குறைந்து அவை அதிக வெப்பத்தை உள்வாங்கி இரவில் வெளிப்படுத்துகிறது.

சென்னையில் பல வீடுகளில் அஸ்பெஸ்டாஸ், உலோக ஓடுகள் அதிகம் இருப்பதும் இரவு வெப்ப உயர்விற்கு காரணமாகிறது. மேற்கூரைகள் வெப்பத்தை தணிக்கும் வகையில் கட்டமைக்கப்படவில்லை.

சென்னையின் தேனாம்பேட்டை, எழும்பூர், பெரம்பூர் பகுதிகளில் வெப்பதீவு விளைவாக 2.5°C-3.5°C வரை வெப்பம் உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே சென்னை தான் வெப்ப உயர்வு அதிகம் உள்ள பெருநகரமாக முதலிடத்தில் உள்ளது.

இருந்தாலும், இந்தியாவிலேயே சென்னையில் தான் மரங்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகள் அல்லது புள்ளி விவரங்கள் தெளிவாக இல்லை. மும்பையில் 2017 புள்ளிவிபரப்படி 29 லட்சம் மரங்கள் உள்ளன. சென்னையில் 2011,2017ல் அதற்கான முயற்சிகள் அறிக்கையாக இருந்தாலும் முடிவான,தெளிவான புள்ளி விவரங்கள் இல்லை.

2016ல் தன்னார்வ அமைப்பு மூலம் வார்ட் 176ல் சென்னையில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வார்தா புயலின் காரணமாக அங்கு 16.36 சதவீத மரங்கள் சேதமடைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, சென்னையில் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள் அரசு மனது வைத்தால் நிச்சயம் சாத்தியமே என்பதை சுட்டிக்காட்டுகிறது.

சென்னை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பில் (Climate Vulnerability Index) 12வது இடத்தில் உள்ளது.

காலநிலை மாற்றம் குறித்தான விசயங்களில் தலைநகர் சென்னையே பாதிக்கப்பட்டும்-இரவு அதிகபட்ச வெப்பம் கணிசமாக உயர்ந்தும், தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது எப்படி சரியாகும்?

அதற்கான அழுத்தத்தை சுற்றுச்சூழல் அமைப்புகள், தன்னார்வலர்கள் கொடுக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே சிறந்த வழியாக இருக்கும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.