தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Best Waterfalls In Tamil Nadu

Best Waterfalls in Tamil nadu: தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த நீர்வீழ்ச்சிகளுக்கு ஒரு டூர் போடுங்க!

I Jayachandran HT Tamil
Jun 01, 2023 12:36 PM IST

தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த நீர்வீழ்ச்சிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி

ட்ரெண்டிங் செய்திகள்

குற்றாலம்-

குற்றாலம் அருவிகளைப் பற்றி சொல்வதற்கு பெரிய அறிமுகமே தேவைப்படாத இடம். தென்காசிக்கு அருகில் இருக்கும் குற்றாலத்துக்கு உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பிரதான அருவியான பேரருவி 60 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இதில் குளிக்கும் போது தலை முதல் கால் வரை இருக்கும் அனைத்து உடல்வலிகளும் நீங்குகின்றன. குற்றாலத்தில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் நீர்வரத்து அதிகமாகும்.

குற்றாலத்தில் பேரருவி தவிர, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவி, குரங்கு அருவி, தேனருவி, செண்பகா தேவி அருவி, பாலருவி ஆகியவை உள்ளன. இதில் இப்போது தேனருவி, சென்பகாதேவி அருவி பாலருவிக்கு குற்றாலத்திலிருந்து செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்குவதில்லை. இது தவிர விஐபி அருவி ஒன்று உள்ளது. இது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சென்று குளிப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.

பாலருவிக்கு செங்கோட்டை வழியாக கேரளா பகுதிக்குள் சில கிலோ மீட்டர் சென்றால் நல்ல பாதை உள்ளது. அங்கு சென்று குளிக்கலாம். அதேபோல் இயக்குநர் பாலா தயாரித்த அவன் இவன் பட சூட்டிங் நடைபெற்ற இடத்தைக் கடந்து சென்றால் அங்கு குடமுருட்டி அருவி உள்ளது. அதில் குளித்தால் சூப்பராக இருக்கும். குற்றாலம் செனறால் இந்த அருவிகளை மிஸ் பண்ண வேண்டாம்.

சுருளி அருவி-

தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவி தமிழ்நாட்டில் இருக்கும் மிகச் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. இங்கு நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படும். அருவியை சுற்றிலும் மொத்த 1000 லிங்களும் உள்ளன. கோடை காலத்தில் குடும்பத்துடன் சென்று வர சுருளி அருவி மிகச் சிறந்த தேர்வு ஆகும்.

குரங்கு நீர்வீழ்ச்சி-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இங்கு குளிப்பதே தனி ஆனந்தத்தை தரும். குரங்கு அருவி பொள்ளாச்சியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் இருக்கிறது. வால்பாறை செல்லும் மலைப்பகுதியில் வழியில் இந்த அருவி அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சென்று வரலாம். குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஏற்ற மாதங்கள் அக்டோபர் மற்றும் மார்ச்.

ஓகேனக்கல்-

'இந்தியாவின் நயாகரா' என அழைக்கப்பரும் ஓகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் இருக்கிறது. ஒரு அருவியாக இல்லாமல், பல அருவிகள் ஒன்று சேரும் சங்கமாக உள்ளது. தண்ணீரில் நன்கு குளியல் போட வேண்டும் என நினைக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஓகேனக்கல் சொர்க்கபுரியாக திகழ்கிறது. ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை சுற்றுலா செல்ல சிறந்த இடமாக இது உள்ளது.

ஓகேனக்கலில் நல்ல குளியல் போட்டு அந்தப் பகுதியில் உள்ள நிறைய கடைகளில் சுடச்சுட ஆற்றுமீன்கள் வறுவல் போட்டுத் தருவார்கள். நன்றாக சாப்பிட்டும் வரலாம்.

திற்பரப்பு அருவி-

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ .மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் இந்த அருவி உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.

திற்பரப்பு அருவி பரவலாக விழுவதால் குளிப்பதற்கு மிகவும் சூப்பராக இருக்கும். .

ஆகாய கங்கை-

கொல்லிமலையில் இருக்கும் இந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் 300 அடி உயரத்தில் இருந்து நீர் கொட்டும். கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் இங்கு செல்லலாம்.

திருமூர்த்தி அருவி-

உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கும் இந்த அருவில் குடும்பத்துடன் சென்று வர மிகச் சிறந்த சுற்றுலாதலமாகும். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் குளிக்கவும் பாதுகாப்பான இடமாக உள்ளது. இந்த கோடை காலத்தில் கட்டாயம் சென்று வரலாம்.

கும்பக்கரை அருவி-

தேனி மாவட்டத்தில் இருக்கும் கும்பக்கரை அருவியில் தற்சமயம் சீசன் டைம். இங்கு இப்போது சுற்றுலாவாசிகள் அதிகளவு சென்று கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வார விடுமுறைக்கு குழந்தைகளை அழைத்து சென்று வாருங்கள்.

பாபநாசம் அருவி-

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இந்த அருவி உள்ளது.. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சூப்பராக இந்த அருவியில் குளிக்கலாம். ஜூன் முதல் டிசம்பர் வரையிலும் பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மலை பெய்யும் போதெல்லாம் இதில் தண்ணீர் நன்றாக வரும். குளிப்பதற்கு நன்றாக இருக்கும்.

குட்லாடம்பட்டி அருவி-

மதுரை மாவட்டம் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் இடதுபுறமாக உள்ள மலைச்சாரலில் இந்த அருவி உள்ளது. இந்த அருவிக்கு சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஜூன் முதல் அக்டோபர் வரை இங்கு சென்று குளித்து வரலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்