தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Medicine: சிறுகுறிஞ்சான் மூலிகையின் 10 மருத்துவ பயன்கள்

Herbal Medicine: சிறுகுறிஞ்சான் மூலிகையின் 10 மருத்துவ பயன்கள்

I Jayachandran HT Tamil
May 25, 2023 04:03 PM IST

ஆற்றல் மிக்க சிறுகுறிஞ்சான் மூலிகையின் 10 மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ பயன்கள்
சிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ பயன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

எந்த ஒரு சிறிய வகையான உடல்நல பாதிப்புக்கும் நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ரசாயனங்கள் அதிகம் கலந்த மருந்துகளையே உடனடியாக எடுத்துக் கொள்கின்றனர். இது நோய்களை தீர்த்தாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

பலவகையான அற்புதமான உயிர்காக்கும் மூலிகைகள் நிறைந்த நாடாக தமிழ்நாடு இருக்கிறது. நமது பண்டைய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுகுறிஞ்சான் எனப்படும் மூலிகையின் மருத்துவ குணங்கள் பற்றி கூறப்பட்டிருக்கின்றன. அந்த சிறுகுறிஞ்சான் மூலிகையை பயன்படுத்தி எத்தகைய நோய்களைத் தீர்க்கலாம் என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1.நீரிழிவு கட்டுப்பட நீரிழிவு நோய் கட்டுப்பட சிறுகுறிஞ்சான் இலைகள், அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, ஒரு டீஸ்பூன் அளவு தூளை வாயில் போட்டுகொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். உடல்நலம் மேம்படும்.

2. மாதவிலக்கு சரியாக ஏற்பட ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவு களா இலைகள் சேர்த்து, நன்றாக மைய அரைத்து, பசையாக்கி, தினமும் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் ஒரு நாள் மட்டும் உட்கொள்ள மாதவிலக்கு குறைபாடுகள் நீங்கும்.

3. சுவாசம் சீராக இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது. ஒரு சிலருக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந்து வாயில் போட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை செய்ய நல்ல குணம் தெரியும்.

4. காய்ச்சல் குணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல், ஜுரம் போன்றவை ஏற்படுகிறது. காய்ச்சல் தீர 10 சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 5 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, நசுக்கி, ஒரு லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, கஷாயம் செய்து, ஒரு மணி நேரத்திற்கு இரண்டு தேக்கரண்டிகள் வீதம் குடித்து வர மிக விரைவிலேயே காய்ச்சல், நீங்கும்.

5.ஒரு சிலருக்கு உடலில் இருக்கின்ற நிண நீர் சுரப்பிகளின் அதீத உணர்வு தன்மையாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமைக்கு உடனடி நிவாரணம் கொடுக்காத பட்சத்தில் உடல்நலத்தை கடுமையாக பாதிக்க செய்கிறது. ஒவ்வாமை நஞ்சு வெளிப்பட சிறுகுறிஞ்சான் வேரைக் காயவைத்து, தூள் செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால், சீக்கிரத்தில் வாந்தி ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்படுத்திய நஞ்சுத்தன்மை வெளியாகும்.

6. நெஞ்சில் சளி கட்டிக்கொள்ளும் போதும், கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட காலத்திலும் இருமல் ஏற்பட்டு பாடாய்படுத்துகிறது. கடுமையான இருமல் குணமாக சுத்தம் செய்து, நன்கு நசுக்கிய சிறுகுறிஞ்சான் வேர் 20 கிராம், ஒரு லிட்டர் நீரில் போட்டு, 100மி.லி.யாகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு 30 மி.லி. அளவு, காலை, மதியம், மாலை வேளைகளில், ஒரு நாள் மட்டும் குடிக்க வேண்டும். இதை செய்வதால் விரைவில் கடுமையான இருமல் கட்டுப்படும்.

7. நமது உடலின் இயக்கம் சீராக இருக்க நரம்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். நரம்பு மண்டலம் வலுவிழந்தால் நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி செய்து, பசும்பாலில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் வலிமை பெற்று நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகளை நீக்குகிறது.

8. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு சாப்பிட்டு 4 மணி நேரத்துக்குள்ளாக நன்கு பசி எடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு பசி உணர்வு இல்லாததால் சரிவர சாப்பிட முடியாமல், உடல் ஆரோக்கியம் குறைகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருபவர்களுக்கு நல்ல பசி உணர்வு தூண்டப் பெற்று ,உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

9. எந்த ஒரு மனிதருக்கும் உடல் வெப்பம் சரியான அளவில் இருக்க வேண்டும். கடுமையான கோடை காலங்கள் மற்றும் இதர காரணங்களால் ஒரு சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய பிரச்னைகள் நீங்க, சிறுகுறிஞ்சான் இலைகளை பக்குவம் செய்து, கசாயமாக காய்ச்சி, ஆறவைத்து அருந்துபவர்களுக்கு உடல் சூடு தணிந்து, உடல் குளுமை அடையும்.

10. உடலில் வாதம், பித்தம், கபம் என்கிற முக்குணங்கள் அனைவருக்குமே இருக்கின்றன. இதில் அதிக நேரம் கண் விழிப்பதாலும், பித்தத்தை அதிகரிக்கின்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் உடலில் பித்த தன்மை அதிகரித்து, பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை காயவைத்து, பொடியாக்கி இளம் சூடான நீரில் கலந்து அருந்துபவர்களுக்கு பித்தம் உடனடியாக நீங்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்