Benefits of Neeragaram : ‘பழைய சோறு பச்ச மொளகா’ – நீராகாரம் புற்றுநோயைக் கூட தடுக்கும்! ஆராய்ச்சியே கூறிவிட்டது!
Benefits of Neeragaram : நெல்லிக்கனியில் வைட்டமின் சி எனும் Anti-oxidant இருந்து, அது செல் இறப்பை தடுத்து, நீண்ட நாள் நோயின்றி வாழ உதவியதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தினர்.

பழைய சோறும் சோற்று நீரும் (Fermented Rice Water-FRW), பெருங்குடல் செல்களை வீக்கம் மற்றும் புற்றுநோயிலிருந்து காக்கும் என சென்னை ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொதித்த அரிசிக்கஞ்சி தண்ணீரில், உயிரி மூலக்கூறுகள் (Biomolecules) அதிகமிருப்பதும், ஊட்டச்சத்துகளை உட்கிரகித்துக்கொள்ளுதல், குடல் செல்களின் எதிர்ப்புத்தன்மையை மூலக்கூறு வெளிப்பாடு (Gene Expression) மூலம் அதிகமாக்குவதால், "பழைய சோறு" பயனுள்ளதாக உள்ளதென ஆய்வுகள் முலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை "Regenerative Medicine and Research" துறை ஆய்வாளர்கள் "Biomolecules" எனும் சர்வதேச மருந்துவ ஆய்விதழில், "Postbiotics of Naturally Fermented Symbiotic Mixture of Rice Water Aids in Promoting Colonocyte Health" எனும் தலைப்பில் மார்ச் 13ம் தேதி 2024ம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொன்றுதொட்டே, பழைய சோறு மற்றும் சோற்று நீரில் நல நுண்ணுயிரிகள் (Probiotics) (Leuconostoc lactis, Lactococcus, Weisella, Lactobacillus போன்ற) அதிகமிருந்து குடல் சுகாதாரத்தை பேணிகாப்பது பரம்பரை அறிவாக இருந்து வந்துள்ளது.
குடலில் இருக்கும் நன்மை பயக்கும் நலநுண்ணுயிரிகள் (Probiotics or Synbiotics) காரணமாக நிகழும் நொதித்தல் மூலமாக வெளியாகும் வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்கள் (Metabolites) குடலின் செல்களை வலிமைப்படுத்தி குடல் சுகாதாரத்தை பேணிகாக்கிறது என ஆய்வின் முக்கிய நபரான மருத்துவர் சாருமதி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நொதித்தல் காரணமாக பழைய சோற்று நீரில் உருவாகும் வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்கள், (Metabolites) ஆற்றல் வளர்சிதைமாற்ற பாதைகளில் (Energy Metabolism Pathways) பயணித்து குடல்செல்களின் மறுசீரப்பில் (Cellular Regeneration) பெரும் பங்கு வகிப்பது ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், நொதித்தல் காரணமாக உருவாகும் வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்கள் குடல் செல்களை வீக்கம் மற்றும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து (Inflammation/Cancer) காக்கிறது என்பதும் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்கள் (Metabolites) என்பது உணவில் அல்லது சிறு உயிரினங்களில் இயற்கையாக அல்லது நொதித்தல் காரணமாக உருவாக்கப்படும் சிறுமூலக்கூறுகளாகும்.
ஆய்வின் இன்னொரு முக்கிய நபரான மருத்துவர் ஜெஸ்வந்த் கூறுகையில், "நொதித்த பழையசோற்று நீரில், உடம்பை நோயிலிருந்து காக்கும், anti-oxidants, anti-inflammatory agents, anti-cancer agents, முக்கிய வைட்டமின்கள், மினரல்கள், கிருமிக்கொல்லிகள் உயிருடன் உள்ள நலநுண்ணுயிரிகள் போன்றவை நிறைய உள்ளது கண்டறியப்பட்டுள்ளது" என கருத்து தெரிவித்துள்ளார்.
1997ம் ஆண்டு, பழையசோறு குடலில் ஏற்படும் வீக்கம் (Inflammatory Bowel Disease), சிடுசிடு குடல் உபாதை (Irritable Bowel Syndrome) போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வாக அமைந்தது எனும் சூழலில், மருத்துவர்கள் வெள்ளைப்பொன்னி, ரேஷன் அரிசி (Raw Rice), மாப்பிள்ளை சம்பா அரிசி நீரில் நொதித்தல் காரணமாக, பல நலநுண்ணுயிரிகள் இருப்பதை உறுதிசெய்து, அவை நோயிலிருந்து காக்கும் செயலில் உதவிபுரிந்ததை கண்டறிந்துள்ளனர்.
வடித்த சோறு ஆறியபின், நீர் கலக்கப்பட்டு, மண்பாண்டத்தில் 10 மணி நேரம் நொதித்தல் செயல் அனுமதிக்கப்பட்ட பின் பெறும் பழையசோற்று நீரில் 200க்கும் மேற்பட்ட வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்களும், நலநுண்ணுயிரிகளும், இருப்பதை ஆய்வு உறுதிசெய்ததோடு, அவை குடலை வீக்கம் மற்றும் புற்றுநோயிலிருந்து காக்கும் திறன் கொண்டிருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளனர்.
நம் முன்னோர்களின் அறிவியல் திறனுக்கு பழையசோறு மற்றும் நீராகாரம் சோற்றுநீர் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதை இந்த ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளது.
நெல்லிக்கனியில் வைட்டமின் சி எனும் Anti-oxidant இருந்து, அது செல் இறப்பை தடுத்து, நீண்ட நாள் நோயின்றி வாழ உதவியதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தினர்.
இனியாவது, நொதித்த உணவுகளை நாமும் அதிகம் உட்கொண்டு நமது சுகாதாரத்தை பேணிகாக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.

டாபிக்ஸ்