Benefits of Mapillai samba Rice : திருமணத்தில் மணமகனுக்கு ஸ்பெஷலாக சமைத்து தரப்படும் அரிசி! அப்டி என்ன ரகசியம் இருக்கு?
Benefits of Mapillai Samba Rice : பாரம்பரியம் பாதுகாப்போம் என்ற இந்த புதிய தொடரில் நாம், தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தின் பாரம்பரிய வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள அரிசி மாப்பிள்ளை சம்பா அரிசி. அந்த காலத்தில் இளவட்ட கல் என்ற ஒன்று இருக்குமாம், அதை தூக்குபவர்களுக்குத்தான் பெண்ணை தருவார்கள்.
அவர்கள் அந்தக்கல்லை தூக்கிவிட்டால் பலசாலிகளாக கருதப்படுவார்கள். அந்த பலம் பெறுவதற்கு உதவக்கூடிய அரிசி இது என்பதால், இது மாப்பிள்ளை சம்பா அரிசி என்று அழைக்கப்படுகிறது. இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது இந்த அரிசி.
100 கிராம் அரிசியில் 200 கலோரிகள் உள்ளது. மொத்த கொழுப்பு 2-3 கிராம், கெட்ட கொழுப்பு 0 சதவீதம், சோடியம் 6 மில்லிகிராம், பொட்டாசியம் 200 மில்லிகிராம், கார்போஹைட்ரேட் 60 கிராம், நார்ச்சத்துக்கள் 6 கிராம், சர்க்கரை ஒன்றரை கிராம், புரதம் 6 கிராம், இரும்புச்சத்து 0.9 மில்லிகிராம், வைட்டமின் இ 0.2 மில்லிகிராம், வைட்டமின் பி2 0.16 மில்லிகிராம், வைட்டமின் பி3 1.1 மில்லிகிராம், கால்சியம் 40 மில்லிகிராம், பாஸ்பரஸ் 200 மில்லிகிராம், மெக்னீசியம் 48 மில்லிகிராம் உள்ளது.
