Beet Root Laddu : பீட்ரூட்டில் லட்டு செய்யலாம் தெரியுமா? ஆரோக்கியத்துடன், சுவையும் நிறைந்தது!
Beet Root Laddu : பீட்ரூட்டில் லட்டு செய்யலாம் தெரியுமா? ஆரோக்கியத்துடன், சுவையும் நிறைந்தது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – கால் கிலோ
நெய் – ஒரு ஸ்பூன்
ரவை – ஒரு கப்
முந்திரி – அரை கப்
பால் – ஒரு கப் காய்ச்சியது
பொடித்த சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சாறு பிழிந்துகொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து, அதில் முந்திரி பருப்புக்களை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதில் ரவையை சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். அடுத்து அதில் பிழிந்து வைத்துள்ள பீட்ரூட் சாறை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். காய்ச்சிய பாலை கொஞ்சம் மட்டுமே சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
ரவையில் வாசம் வரும் வரையும், பீட்ரூட்டின் பச்சை வாசம் போகும் வரையும் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். பின்னர் பொடித்த சர்க்கரையை சேர்த்து உதிரியாக பிரட்டி எடுக்கவேண்டும்.
கடைசியாக ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதையே பீட்ரூட் கேசரியாகவும் கிண்டி எடுக்கலாம். பாலைக்காய்ச்சி, அதில் ரவையை சேர்த்து கிளறிவிட்டு, பின்னர் பீட்ரூட் சாறை சேர்க்கவேண்டும்.
பாலில் நேரடியாக பீட்ரூட் சாறை சேர்த்தால், அது திரிந்துவிடும். எனவே அதை மட்டும் கவனமாக செய்தால் போதும். மற்றபடி கேசரிக்கு செய்யவேண்டிய அதே முறைகளை பின்பற்றி செய்தாலே பீட்ரூட் கேசரி தயார்.
இந்த பீட்ரூட் லட்டுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை ஃபிரிட்ஜில் இரண்டு நாட்கள் வரை வைத்துக்கொள்ளவாம். ஆனால், தேவைப்படும்போது ஃபிரஷ்ஷாக செய்வது மட்டுமே அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளியில் இருந்து வீடு திரும்பி வரும் குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட இதுபோல் லட்டு செய்துகொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
பீட்ரூட்டின் நன்மைகள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது
வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது
ரத்த அழுத்தத்தை குறைக்கும்
உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது
ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கலோரிகள் 29, புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது.
பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. பீட்ரூட்டில் உள்ள நற்குணங்களுக்காக அதை உணவில் சேர்த்துக்கொண்டு, பல்வேறு ரெசிபிகள் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்
உடலுக்கு தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் பீட்ரூட்களை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பீட்ரூட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் தினமும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் பட்டியலில் பீட்ரூட் உள்ளது.
எனவே பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளம் இடுங்கள். எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. கட்டாயம் பீட்ரூட்டில் இந்த கோலா உருண்டையை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
டாபிக்ஸ்