Arisi Paruppu Sadam: கொங்கு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம்.. வீடே மணக்கும்.. ருசி அசத்தும்.. இப்படி செஞ்சுபாருங்க!
கோவை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பிரபலமானது. காலை மாலை எப்போது வேண்டுமானாலும் எளிதாக செய்துவிடலாம்.
இன்றைய அவசர வாழ்க்கையில் காலை உணவுக்கு என்ன சமைக்க வேண்டும் என்பது பெண்களுக்கு ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. அப்படி செய்யும் உணவு காலை வேலையில் சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. அப்படி பட்டவர்களுக்கு தான் இந்த அரிசி பருப்பு சாதம். கோவை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பிரபலமானது. காலை மாலை எப்போது வேண்டுமானாலும் எளிதாக செய்துவிடலாம்.
அரிசி பருப்பு சாதத்திற்கு தேவையான பொருட்கள்
அரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - அரை கப்
எண்ணெய் - 3 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 5
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - ஒன்று
சீரகம் - அரை ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு கால் ஸ்பூன்
கறி வேப்பிலை
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்த மல்லி தூள் - இரண்டு ஸ்பூன்
தண்ணீர் - போதுமானது
செய்முறை
ஒரு கப் அரிசியை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை கப் துவரம் பருப்பை கழுவி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசி பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் மூன்று ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நெய் இரண்டும் சூடான பிறகு அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். கடலை பருப்பு சிவந்து வரும்போது ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்றாக பொரிந்த பிறகு வெட்டி வைத்த ஒரு கப் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். மூன்று பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கி வரும்போது ஐந்து பூண்டு பற்களை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய பழுத்த தக்காளி பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி ஓரளவு மசிந்த பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து கொள்ள வேண்டும். பெருங்காயத் தூளை சேர்த்து நன்றாக கலந்து பிறகு மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இப்போது ஏற்கனவே ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். குக்கரை மூடி இறக்கினால் ருசியான அரிசி பருப்பு சாதம் ரெடி. மேலும் சுவையைக் கூட்ட குக்கரை திறந்தவுடன் இரண்டு ஸ்பூன் அளவுக்கு நெய்யை சேர்த்தால் நீங்கள் செய்த அரிசி பருப்பு சாதம் வீடே மணக்கும். அதில் மல்லி இலைகளை தூவி பரிமாறினால் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.