Kids Health: அளவுக்கு அதிகமாக இனிப்புகள் சாப்பிடும் குழந்தைகள்.. தடுக்க எளிய டிப்ஸ்.. மாற்று உணவுகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kids Health: அளவுக்கு அதிகமாக இனிப்புகள் சாப்பிடும் குழந்தைகள்.. தடுக்க எளிய டிப்ஸ்.. மாற்று உணவுகள் என்ன?

Kids Health: அளவுக்கு அதிகமாக இனிப்புகள் சாப்பிடும் குழந்தைகள்.. தடுக்க எளிய டிப்ஸ்.. மாற்று உணவுகள் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Feb 12, 2025 01:59 PM IST

Kids Health: அளவுக்கு அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு பல் சொத்தை அல்லது உடல் பருமன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இந்த எளிய குறிப்புகள் அவர்களின் குழந்தைகளுக்கு இனிப்பு மீது இருக்கும் பசியைக் கட்டுப்படுத்தலாம்.

அளவுக்கு அதிகமாக இனிப்புகள் சாப்பிடும் குழந்தைகள்.. தடுக்க எளிய டிப்ஸ்.. மாற்று உணவுகள் என்ன?
அளவுக்கு அதிகமாக இனிப்புகள் சாப்பிடும் குழந்தைகள்.. தடுக்க எளிய டிப்ஸ்.. மாற்று உணவுகள் என்ன?

குறிப்பாக சாக்லேட்களை விரும்பாமல் இருக்கும் குழந்தைகள் இருப்பது மிகவும் அரிதான விஷயமே. அவற்றைப் பார்த்தவுடன் அவர்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதிகப்படியான இனிப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்திக்கு ஆபத்தானது. இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும். அந்த வகையில் பெரியவர்கள் இதைப் புரிந்துகொண்டு இனிப்புகளைக் குறைவாகச் சாப்பிடுவதோடு, அதை சாப்பிடுவதில் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள்.

ஆனால் சிறு குழந்தைகள் அப்படி இல்லாமல், அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால் வரும் ஆபத்துகளை புரிந்து கொள்ளாமலும் சாக்லேட்டுகள் மற்றும் இனிப்பு பலகாரங்களை தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். அதிக இனிப்புகளை சாப்பிடுவது குழந்தைகளுக்கு பல் சொத்தையை ஏற்படுத்துவதோடு, உயர் இரத்த சர்க்கரை, உடல் பருமன் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே, உங்கள் குழந்தைகளை இந்த ஆபத்திலிருந்து பாதுகாக்க விரும்பினால், குழந்தைகளிடம் அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடும் விருப்பத்தை குறைக்க வேண்டும். அதைக் குறைப்பது, குழந்தை இனிப்பு நுகர்வை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றாலும் சில டிப்ஸ்களை பாலோ செய்வதன் மூலம் இதை நடைமுறைப்படுத்தலாம்.

தயிர்

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஐஸ்கிரீம், குல்பி, குளிர் பானங்கள் போன்ற இனிப்புகளுக்குப் பதிலாக தயிர் சார்ந்த உணவுகளை கொடுக்கலாம். மேற்கூறிய உணவுகள் போல் குழந்தைகளுக்கு கெட்டியான தயிரும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. தயிரில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. மேலும், தயிர் ஒரு புரோபயாடிக் உணவாக இருப்பதுடன் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் அவர்களின் வளர்ச்சிக்கு அவசியமானதாக உள்ளது

பாலில் இனிப்பை தவிர்த்தல்

பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலில் சுவையூட்டும் பொடி அல்லது சர்க்கரையை சேர்க்கிறார்கள். ஆனால் உங்கள் குழந்தையின் இனிப்புப் பழக்கத்தை உடைக்க விரும்பினால், சர்க்கரை சேர்க்க வேண்டாம். இது கடினமான விஷயமாக தோன்றலாம். எனவே, சர்க்கரையை ஒரேயடியாகச் சேர்ப்பதை நிறுத்தாதீர்கள், ஆனால் படிப்படியாகக் குறைக்கவும்.

டார்க் சாக்லேட்

குழந்தைகள் இனிப்புகளை அதிகம் விரும்புவதால் அதன் சுவையை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள். எனவே, நீங்கள் வெள்ளை அல்லது பால் சாக்லேட்டுக்கு பதிலாக டார்க் சாக்லேட்டைப் பயன்படுத்தலாம். டார்க் சாக்லேட்டில் இனிப்புச் சுவை குறைவாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இதன் சுவை அவ்வளவாகப் பிடிக்காமல் போகலாம், இது அவர்கள் மெதுவாக இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும்.

நார்ச்சத்து மற்றும் புரத உணவு

நார்ச்சத்து மற்றும் புரத உணவுகள் உடலில் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இந்த வகை உணவு குழந்தைகளின் வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கும், இதனால் அவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதற்கு, உங்கள் குழந்தையின் உணவில் பச்சை காய்கறிகள், கோதுமை மற்றும் சாலட்களைச் சேர்க்கலாம்.

பெற்றோர் வீட்டில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே உங்கள் குழந்தைகளும் பின்பற்றுகிறார்கள். எனவே, அதிகமாக குளிர் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் உட்கொள்வதை நிறுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கற்பிக்க, முதலில் நீங்கள் அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் விதமாக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள், உணவுகளை முதல் ஆளாக தவிர்க்க வேண்டும்.

பொறுப்புதுறப்பு: ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து உங்களுக்கு வழங்குகிறோம். இது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு மாற்று இல்லை. உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.