ஆப்பிள் அல்வா : ஆப்பிள் அல்வா; விருந்து மற்றும் விழாக்களில் பரிமாற ஏற்ற இனிப்பு; எப்படி செய்வது பாருங்கள்!
ஆப்பிள் அல்வா : உங்கள் வீட்டு விருந்து மற்றும் விழாக்களில் பரிமாற ஏற்ற வித்யாசமான இனிப்பு. பண்டிகைக் காலங்களில் இறைவனுக்கு படைக்கவும் உகந்தது.

ஆப்பிள் அல்வா ஒரு சூப்பர் சுவையான இனிப்பாகும். இதை நீங்கள் விருந்து மற்றும் விழாக்களில் பரிமாறலாம். இதை சர்க்கரை மற்றும் ஆப்பிள் கூழ்வைத்து செய்யவேண்டும. நெய்யை ஊற்றி சுருளுசுருளு வேகவைத்து எடுக்கும்போது வரும் அந்த கிளாசி லுக்கைப் பார்த்தால், வாயில் எச்சில் நிச்சயம் வரும். ஆப்பிள் அல்வாவை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• ஆப்பிள் – 3
• சர்க்கரை – ஒரு கப்
• ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
• ஃபுட் கலர் ஆரஞ்ச் – ஒரு சிட்டிகை (தேவையில்லையென்றால் தவிர்த்துவிடலாம்)
• நெய் – கால் கப்
• முந்திரி – 8
• திராட்சை – ஒரு கைப்பிடியளவு
• பாதாம் – 8
செய்முறை
1. ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்துவிட்டு, தோலை சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். இதை வெட்டியவுடனே தண்ணீரில் போட்டு விடவேண்டும். அப்போதுதான் நிறம் மாறாமல் இருக்கும். அந்த தண்ணீரில் உப்பு மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்திருக்கலாம் அல்லது சாதாரண தண்ணீராகக் கூடு எடுத்துக்கொள்ளலாம்.
2. ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல மையாக ஆப்பிளை அரைத்துக்கொள்ளவேண்டும்.
3. கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி உடைத்த முந்திரி, பாதாம் மற்றும் திராட்சைகளை சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். அவை பொன்னிறமானவுடன் அவற்றை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
4. அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அரைத்த ஆப்பிள் விழுதை சேர்த்து நெய்யுடன் சேர்த்து கிளறவேண்டும்.
5. ஆப்பிளில் உள்ள தண்ணீர் வற்றும் அளவுக்கு கலந்துவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
6. அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து அது கரைந்து மீண்டும் இளகிவரும் எனவே தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
7. அடுத்து நீங்கள் ஃபுட் கலர் சேர்க்க விரும்பினால் இந்த நேரத்தில் சேர்க்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். நன்றாக கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
8. ஏலக்காய்ப்பொடியைத் தூவிவிட்டு, மேலும் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
9. அடுத்து எஞ்சிய நெய்யையும் சேர்த்து கிளறவேண்டும். நல்ல கெட்டியாகி வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கையில் எடுத்து உருட்டி பார்த்தால், உருண்டைபோல் வரவேண்டும்.
10. கைகள் மற்றும் கடாயில் ஒட்டக்கூடாது. அதுதான் பதம். அந்தப் பதத்திற்கு வரவேண்டும். தொடர்ந்து அல்வாவை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
11. ஒட்டாமல் வந்தவுடன், வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் திராட்சைகளை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான ஆப்பிள் அல்வா தயார்.
இந்த அல்வாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். செய்வதும் எளிது. வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. புதிதாக வேறு எதுவும் தேவையில்லை. எனவே நினைத்தவுடன் செய்து சாப்பிட்டு மகிழுங்கள் இந்த ஆப்பிள் அல்வாவை.

டாபிக்ஸ்