Anti-Biotic : கிருமிக்கொல்லி மருந்துகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் இவ்வளவா? – அதிர்ச்சி ஆராய்ச்சி முடிவுகள்!
Anti-Biotic : மருத்துவர்கள் கிருமிக்கொல்லி மருந்துகளை பரிந்துரைக்கும்போது அதற்கான காரணங்களை தெளிவாக எழுத வேண்டும் எனும் மத்திய சுகாதாரத்துறையின் அங்கமான தேசிய சுகாதாரபணிகள் இயக்குநரின் உத்தரவு பலன் அளிக்குமா?
கிருமிக்கொல்லிகள் தேவையற்று பரிந்துரைக்கப்பட்டால் அது நோயாளிகளுக்கு தேவையற்ற பணச்சுமையை ஏற்படுத்துவதுடன், கிருமிகொல்லிகளுக்கு எதிர்ப்புத் தன்மையை கிருமிகள் பெறவும் வழிவகுக்கும் போக்கிற்கு வித்திடும்.
சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆய்வில் 55 சதவீதம் கிருமிகொல்லிகள் தொற்று ஏற்படுவதை தடுக்க என்ற பெயரில் தேவையற்று பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 6 சதவீதம் கிருமித்தொற்று பாதிப்பில் மட்டுமே கிருமி அல்லது அதனை திறம்பட கொல்லும் கிருமிக்கொல்லி மருந்துகள் கண்டறியப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே அறிவியல் ரீதியாக சரியான சிகிச்சை. எனவே, எஞ்சிய 94 சதவீத கிருமிகொல்லிகளின் பயன்பாடு உண்மையான பலனை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியே.
2019ம் ஆண்டு உலகில் 1.27 மில்லியன் இறப்புகள் நேரடியாக எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகளால் நடந்துள்ளது. 4.95 மில்லியன் இறப்புகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகள் துணைபோயுள்ளது.
தமிழகத்தில் 2023 டிசம்பரில் ஆய்வாளர் ஆவுடைசெல்வி ரத்தினசாமி மற்றும் குழுவினர் செய்த ஆய்வில் 36.7 சதவீதம் பேருக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
E.coli, Staphylococcus aureus, Klebsiella, Pseudomonos, Proteus, Acenetobactor பாக்டீரியா கிருமிகள் கிருமிகொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகிலேயே இந்தியாவில் தான் மிக அதிகமாக ஒவ்வொரு 9 நிமிடத்திலும், ஒரு குழந்தை கிருமிகொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டு இறக்கிறது.
மத்திய அரசின், Director General of Health Services 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவர்களுக்கும், மருத்துவ அமைப்புகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி, தேவையற்று கிருமிகொல்லிகள் பரிந்துரைக்கப்படுவதை தடுக்க மருத்துவர்கள் அனைவரும் இனிமேல் கிருமிகொல்லிகளை பரிந்துரைக்கும்போது, அதற்கான தெளிவான காரணங்களை எழுத வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
மேலும், மருந்தாளுநர்களும் (Pharmacists), மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கிருமிகொல்லி மருந்துகளை விற்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் உண்மையில் பலன் அளிக்குமா?
மருத்துவர்கள் கிருமிகொல்லிகளை பரிந்துரைப்பதற்கு, உண்மையான விளக்கங்களை தான் எழுதினார்கள் என்பதை கண்டறிவது எப்படி? அதை உறுதிபடுத்தும் தெளிவான அல்லது நியாயமான உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளதா?
தவறிழைப்பவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படாமல் இத்திட்டம் பலன் அளிக்குமா?
கிருமித்தொற்றின்போது சரியான கிருமிகொல்லியை தேர்ந்தெடுக்க பரிசோதனை வசதிகள் (Culture & Sensitivity tests) கிராமப்புற அல்லது நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் இல்லை என்ற சூழலில் இத்திட்டம் எவ்வளவு தூரம் பலன் அளிக்கும்?
மருந்தாளுநர்கள் (Pharmasists) மருத்துவர்களின் முறையான பரிந்துரையின்றி, கிருமிகொல்லிகளை விற்பனை செய்யக்கூடாது என்பதை மேற்பார்வை செய்து கண்காணிக்கும் திறமையான அல்லது நியாயமான அமைப்புகள் நம்மிடம் உள்ளதா?
பெரும்பாலான தமிழக மற்றும் இந்திய கிராமங்களில் மருந்து கடைக்காரர்களிடம் மக்கள் முதற்கட்ட சிகிச்சை பெறுவது அதிகரித்து வரும் சூழலில், மருந்துகளை விற்பதால் கிடைக்கும் பொருளாதார பலன்கள் காரணமாக மருந்தாளுநர்கள் முறையாக நடந்து கொள்வார்களா? உண்மை செய்திகளை பதிவுசெய்ய முன்வருவார்களா?
ஊழலுக்கு இத்திட்டம் வழிவகுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இதை எப்படி சரியாக எதிர்கொள்வது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஆய்வில், மீன் அல்லது இறால் வளர்ப்பில் கிருமிகொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுவது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் அதிகம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆசியாவில் நீர்வாழ் உயிரினங்களில் 749 கிருமிகொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கிருமிகொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகள் உருவாக, கால்நடை அல்லது கோழி வளர்ப்பில், மீன் அல்லது இறால் வளர்ப்பில் தேவையற்று பயன்படுத்தப்படும் கிருமிகொல்லிகளும் காரணம் என இருக்க அதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
சில கிருமிகொல்லிகள் (கோலிஸ்டின்) 2019ல் கோழி வளர்ப்பில் தடை செய்யப்பட்டாலும், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா?
2023ம் ஆண்டு ஜூலையில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் கிரிஸ்குமார் மற்றும் தருண் பட்நகர் மற்றும் குழுவினர் சென்னையில் மேற்கொண்ட ஆய்வில், மருத்துவமனை அல்லது சமூகத்து மக்களின் மலத்தில் செய்த பரிசோதனையில் நோய் எதிர்ப்பு தன்மை பெற்ற கிருமிகள் அதிகம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆய்வாளர் சிறீசு (Shrishu)-(SIMS) மற்றும் குழுவினர் 2023ல் சென்னையில் செய்த ஆய்வில் 17.3/1000 Patient days என கிருமிகொல்லி எதிர்ப்புத்தன்மை அதிகமிருப்பது தெரியவந்துள்ளது.
சுருக்கமாக, DGHS இயக்குநர் அதுல்கோயலின் பரிந்துரை எதிர்பார்த்த பலனைக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்