Amla Rasam : மணக்க மணக்க முழு நெல்லிக்காய் ரசம்; குளிருக்கு இதமானது; நாவுக்கு சுவையானது! இதோ ரெசிபி!
Amla Rasam : நெல்லிக்காயை முழுதாக சேர்த்து வைக்கப்படும் ரசம். செய்து பாருங்கள் எத்தனை சுவையானது என்று தெரியும்.

நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்களுக்காக இதை தினமும் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும் என்று மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். இதில் அதைத் தவிர எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு பிடிக்காது. சிலருக்கு ஒவ்வாது. எனவே அதில் எண்ணற்ற ரெசிபிக்களை நாம் செய்து சாப்பிடலாம். அதாவது நெல்லிக்காயை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு முறையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று இயற்கை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். எண்ணற்ற நன்மைகளும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்த நெல்லிக்காயில் ரசம் வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
• நெல்லிக்காய் – 7
• துவரம் பருப்பு – கால் கப்
(இதை அலசிவிட்டு, குக்கரில் வைத்து நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அது வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு, பருப்பை மட்டும் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வேகவைத்த தண்ணீருடன் கலந்துகொள்ளவேண்டும் அல்லது பருப்பை நன்றாக கடைந்தும் கரைத்துக்கொள்ளலாம்)
• மஞ்சள் தூள் – கால் கப்
• உப்பு – தேவையான அளவு
• கறிவேப்பிலை – 3 கொத்து
• பச்சை மிளகாய் – 2
• வர மல்லி – ஒரு ஸ்பூன்
• மிளகு – ஒரு ஸ்பூன்
• சீரகம் – ஒரு ஸ்பூன்
(ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் 3 நெல்லிக்காய்களை மட்டும் நறுக்கி சேர்த்து அதனுடன் 2 கொத்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமல்லி, மிளகு, சீரகம் என அனைத்தையும் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்த விழுதை தனியாக வைத்துவிடவேண்டும்)
• மல்லித்தழை – சிறிதளவு
• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
• பொடித்த வெல்லம் – கால் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
• நெய் – ஒரு ஸ்பூன்
• கடுகு – ஒரு ஸ்பூன்
• சீரகம் – ஒரு ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
வேகவைத்த பருப்புடன் தண்ணீர் சேர்த்து, 4 நெல்லிக்காய்கள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அது கொதித்து வரும்வேளையில் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கும்போது பெருங்காயத் தூள், மல்லித்தழை, பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் நெய், கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து, சூடான ரசத்தில் சேர்த்தால் மணக்க மணக்க நெல்லி ரசம் தயார். சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு ஆம்லேட் மற்றும் அப்பளம் இருந்தால் போதும். இந்த ரசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரசத்தை குளிருக்கு வைத்து சாப்பிட்டால் உங்கள் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். எனவே ஒருமுறை செய்து ருசித்துப் பாருங்கள். ஏனெனில் ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானதாக இருக்கும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்