Amla Chutney : நெல்லிக்காயில் இப்படி ஒரு சட்னி செய்து பாருங்க.. ருசி அருமையா இருக்கும்.. ஆரோக்கியத்திற்கும் நல்லது!
Amla Chutney : சாப்பிட விரும்பாதவர்கள் இருந்தால் காரசாரமாக இப்படி சட்னி அரைத்து கொடுங்கள். ருசி அருமையாக இருக்கும். சூடான இட்லியுடன் சாப்பிட அட்டகாதமாக இருக்கும். சாதத்திற்கும் இதை பயன்படுத்தலாம். உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. நெல்லிக்காயில் விட்டமின் சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளது.

நெல்லிக்காய் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்று என தெரிந்தாலும் பலர் அதை சாப்பிட தயங்குகிறார்கள். உங்கள் வீட்டிலும் நெல்லிக்காய் சாப்பிட விரும்பாதவர்கள் இருந்தால் காரசாரமாக இப்படி சட்னி அரைத்து கொடுங்கள். ருசி அருமையாக இருக்கும். சூடான இட்லியுடன் சாப்பிட அட்டகாதமாக இருக்கும். சாதத்திற்கும் இதை பயன்படுத்தலாம். உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. நெல்லிக்காயில் விட்டமின் சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளது.
நெல்லிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- எள் - 1 டேபிள் ஸ்பூன்
- உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 2 பல்
- சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நெல்லிக்காய் - 4
- தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- பச்சை மிளகாய் - 5
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
நெல்லிக்காய் சட்னி செய்முறை
முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி விதை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடான பிறகு அதில் ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பருப்பு நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் வெள்ளை எள் சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில் 2 பூண்டு பல் மற்றும் சிறிதளவு இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் அரை ஸ்பூன் சீரகத்தையும் சேர்க்க வேண்டும்.பின்னர் ஏற்கனவே நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நெல்லிக்காய் சேர்த்து 3 முதல் 4 நிமிடம் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து விட வேண்டும் பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். மேலும் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலையையும் சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு சட்னிக்கு தேவையான உப்பை சேர்க்க வேண்டும். சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
வதக்கிய பொருட்களை நன்றாக ஆற விட வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நெல்லிக்காய் சட்னியை அரைக்க வேண்டும். லேசான கொர கொரப்பாக இருந்தால் சட்னி ருசியாக இருக்கும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு மிளகாய் வத்தலை சேர்க்க வேண்டும். கால் ஸ்பூன் பெருங்காய தூளையும், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து தாளித்து அதை சட்னியில் நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் ருசியான நெல்லிக்காய் சட்னி ரெடி இதை கெட்டியா அரைத்து துவையல் போல் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் ருசி அருமையாக இருக்கும்.
குறிப்பு: விருப்பம் உடையவர்கள் ஒரு ஸ்பூன் வெல்லத்தையும் சட்னியுடன் சேர்த்து அரைக்கலாம். லேசான புளிப்பு இனிப்பு, காரம் எல்லாம் சேர்ந்து சட்னியின் ருசி அட்டகாசமாக இருக்கும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்