Amla Benefits : அன்றாடம் சாப்பிட ஏற்ற அருமருந்தா நெல்லி? எப்படி எடுக்கவேண்டும்? – இயற்கை மருத்துவர் விளக்கம்!
நெல்லிக்காய் குறித்த அறிய தகவல்களை இயற்கை மருத்துவர் விளக்குகிறார்.

பாரம்பரிய இயற்கை சிகிச்சைகளை வழங்கக்கூடிய முனைவர் ராசா ஈசன் என்பவர் நமக்கு அளித்த பேட்டியில் நெல்லிக்காயை நாம் எப்படி எடுத்துக்கொண்டால், அது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகைள் கொடுக்கும் என்று விளக்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறிய விவரம்,
நெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
நெல்லிக்காய் என்பது இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடை ஆகும். நெல்லிக்காயில் அதிகப்படியான நார்சத்து மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது, மேலும் உள்ள வைட்டமின் C உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும் வைட்டமின் b5, b6 உடன் அடிப்படை ஆதார வித்தாக விளங்குகிறது, மேலும் இதில் அடங்கியுள்ள பொட்டாசியம், மாங்கனீஸ், செம்பு ஆகிய கனிமங்கள் உடலின் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும்.
இந்த காலகட்டங்களில் நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடுவதும், சாறு பிழிந்து சாப்பிடுவதும் சிறப்பான செயலாகும். நெல்லிக்காய்கள் குளிர்ச்சி தரக்கூடியவை என்பதால் அந்த காலகட்டத்தில் இருக்கக்கூடிய வெயிலுக்குத் தகுந்தவாறு நமது உடலை குளிர்ச்சிபடுத்த இது உதவுகிறது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அனைவருமே தாராளமாக நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளலாம்.
வாத உடல் கொண்டவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாமா?
பொதுவாக வாதம் என்பது ஐம்பூதங்களில் ஆகாயமும் காற்றும் கலந்த கலவையாகும். இந்த இரண்டு பூதங்களுமே அடிப்படையில் குளிர்ச்சியானவை. இந்த இரண்டு பூதங்களில் காற்று பூதம் நெருப்பின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளக்கூடியது. காற்று பூதமானது தன்னுள் உள்வாங்கிக் கொள்ளும் வெப்பத்தின் தன்மையைப் பொறுத்தே வாதத்தின் பாதிப்பு உடலில் கூடவோ குறையவோ செய்யும். அதாவது காற்றில் உள்ள வெப்பம் குறைந்தால் வாதம் கூடும், அதேபோல் காற்றிலுள்ள வெப்பம் கூடினால் வாதம் குறையும்.
எனவே வாத உடல் கொண்டவர்கள் நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளும்போது உடலில் உள்ள காற்று மண்டலத்தை குளிரச்செய்து வாதத்தை இது சற்றே அதிகப்படுத்தும். எனவே இப்படிப்பட்ட வாத உடல் கொண்டவர்கள், வெப்பம் அதிகமாக இல்லாத சூழலில் நெல்லிக்காயை அதனுடைய குளிர்ச்சி தன்மை போகும்படி மாற்றி அமைத்து உட்கொள்ளலாம். அதாவது வேகவைத்து அல்லது ஊறவைத்து எடுத்துக்கொள்ளலாம்.
நெல்லிக்காயில் செய்யக்கூடிய பதார்த்தங்கள் என்ன?
ஆறு காலங்களுக்கும் ஆறு வகைகளாக இந்த நெல்லிக்காயை செய்து சாப்பிட இயலும்.
நெல்லி சாறு - வெயில் காலங்களில் பருக உகந்தது
நெல்லி வற்றல் - முன்பனி காலத்தில் பயன்படுத்தக்கூடியது
நெல்லி ஊறுகாய் - மழை காலங்களில் பயன்படுத்தக்கூடியது
நெல்லி அவியல் - காற்று காலங்களில் பயன்படுத்தக்கூடியது
நெல்லி பொடி - தேனில் கலந்து பயன்படுத்த வேண்டும், பின்பனி காலங்களில் பயன்படுத்தக்கூடியது
நெல்லி ஊரல் - முதுவேனில் காலத்தில் பயன்படுத்தக்கூடியது.
மரத்தின் மற்ற பாகங்கள் தரும் பலன்கள்
நெல்லிக்காய் மட்டுமின்றி நெல்லி மரத்தின் வேர், பட்டை, இலை என யாவும் மருத்துவ குணம் கொண்டவை.
நெல்லி மர வேர் கசாயம் வாந்தி, மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்க வல்லது.
நெல்லி மரத்தின் இலை மற்றும் கொழுந்து ஆகியவற்றின் கசாயம் கண்களை கழுவுவதற்கு உகந்தது. நெல்லி இலை கசாயத்தில் கண்களை கழுவி வர கண் பார்வை கோளாறுகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் தங்கள் கண்களுடைய சூட்டை தனித்துக் கொள்ளலாம்.
நெல்லி மர பட்டை வயிற்றுப் புண்களுக்கு சிறப்பான மருந்தாகும்.
வாத உடல் கொண்டவர்கள் செய்யக்கூடாதவைகள்
வாத உடல் கொண்டவர்கள் உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பதார்த்தங்களை மிக அதிக அளவில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இரவில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிகப்படியான பழு கொடுக்கக்கூடிய பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி எண்ணெய் குளியல் குறைக்க வேண்டும்.
அதிகாலை வேளைகளில் இளநீர் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.
தானியங்கள், பட்டாணி, பயிறு வகைகள் உட்கொள்ளும்போது கூட சுக்கு சேர்த்து அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாத உடல் கொண்டவர்கள் மட்டுமல்லாமல் பித்தம் மற்றும் கப உடல் கொண்டவர்கள் கூட மேற்கண்ட முறைகளில் நெல்லிக்காயை செய்து சாப்பிட்டு வரலாம்.
நெல்லிக்காயில் உள்ள நன்மைகள் மற்றும் அதை வாத உடல் கொண்டவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முழுவிளக்கம் கொடுக்கப்படுள்ளது. இதை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்