Aloo Cheese Egg Stuff : ஆலு சீஸ் எக் ஸ்டஃப்; சப்பாத்திபோல் செய்ய வித்யாசமான டிபஃன் மற்றும் ஸ்னாக்ஸ் ரெசிபி!
Aloo Cheese Egg Stuff : ஆலு சப்பாத்தியைப் போன்ற ஒரு ரெசிபி. இதை நீங்கள் சீஸ் சேர்த்து செய்வது எப்படி என்று பாருங்கள் .

உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. அவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் அவர்கள் மகிழ்வார்கள். மாலையில் பள்ளிவிட்டு வீடு திரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இது எண்ணற்ற மற்ற ரெசிபிக்களையும் நினைவூட்டும். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையான ரெசிபியை எப்படி செய்யலாம் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 4 (வேகவைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ளவேண்டும்)
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
முட்டை – 2
பார்ஸ்லே – ஒரு கைப்பிடியளவு
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மைதா – கால் கிலோ
ஓமம் – 10 கிராம்
பேக்கிங் சோடா – அரை ஸ்பூன்
சீஸ் – 4 துண்டுகள்
செய்முறை
4 உருளைக்கிழங்கை குழைய அவித்து அதன் தோலுரித்து நன்றாக மசிக்கவேண்டும். அதில் வெண்ணெய், முட்டைகள், பார்ஸ்லே, மிளகுத்தூள், உப்பு, மைதா, ஓமம், பேக்கிங் சோடா போன்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
இது நல்ல மென்மையான மாவாக வந்ததும் 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிசைத்த மாவை சரி பாதி 4 துண்டுகளாக வெட்டவேண்டும். ஒவ்வொரு துண்டையும் உருட்டி சிறிது மைதா மாவு தூவி பீட்ஸா போல கனமாகக் கைகளால் தட்டி (அ) தேய்த்து வைக்க வேண்டும். இப்போது உங்களிடம் கனமான 4 பீட்ஸா சப்பாத்திகள் இருக்கும்.
தேய்த்த ஒரு சப்பாத்தி மீது ஒரு ஆட்காட்டி விரல் நீளத்தில் நீள் செவ்வக வடிவிலான 6 சீஸ் துண்டுகளை நட்சத்திர வடிவத்தில் வைத்து இன்னொரு தேய்த்த பீட்ஸா சப்பாத்தியால் இதன் மீது மூடி இதன் இரண்டு சப்பாத்தியின் விளிம்பு ஓரங்களையும் நன்றாக ஒட்டும்படி அழுத்தி விடவேண்டும். இப்போது பீட்ஸா போல நடுவில் சீஸுடன் சப்பாத்தி வட்டமாக இருக்கும். இதை முக்கோணமாக ஆறு துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒவ்வொரு துண்டின் நடுவிலும் ஒரு சீஸ் இருக்கும்.
4 சப்பாத்திகளுக்கு மொத்தம் 12 துண்டுகள் வரும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அது நன்றாக சூடானவுடன், வெட்டிய பீட்ஸா துண்டுகளை, கடாயில் போட்டு மிதமான தீயில் மீன் வறுவல் போல இரு பக்கமும் சிவந்து வர பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். ருசியான ஆலு சீஸ் எக் ஸ்டஃப் தயார். இதை சாஸ், ஜாம், புதினா சட்னிகளுடன் சாப்பிட வேண்டும். நிச்சயம் அடுத்த ரவுண்ட் கேட்பீர்கள். இதை நீங்கள் டிஃபன் மற்றும் ஸ்னாக்ஸ் இரண்டுக்கும் எடுத்துக்கொள்ளலாம்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்