HT Tamil Book SPL: 'உலக வரலாற்றை எளிய மொழியில் எடுத்துரைக்கும் வித்தியாசமான நூல்'
தென்னாப்பிரிக்க பயணத்தின்போது அவர் எதிர்கொண்ட நிற வெறுப்பு குறித்தும் பதிவு செய்திருக்கிறார். வடஅமெரிக்காவில் உள்ள ஹாவாய்த் தீவுகளுக்குச் செல்ல வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்பை உருவாக்குங்க என சொல்கிறார் நூலாசிரியர் ஏ.கே.செட்டியார்.

'உலகம் சுற்றும் தமிழன்' எனும் நூல் குறித்துதான் பார்க்கப் போகிறோம். அதற்கு முன் இந்நூலின் ஆசிரியர் ஏ.கே.செட்டியார் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஏ. கே. செட்டியார் (3 நவம்பர் 1911 - 10 செப்டம்பர் 1983) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய பயணக் குறிப்பு எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழில் பயணக் குறிப்பு எழுதுவதில் முன்னோடியாகவும், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படத்திற்காகவும் அவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.
உலகம் சுற்றும் தமிழன் என்ற தலைப்பிலேயே இந்நூல் குறித்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். கரெக்ட்! நீங்கள் யோசித்தது தான். இந்நூல் பயணம் தொடர்புடையது. தமிழில் பயண இலக்கியத்தில் முன்னோடி என அறியப்படுபவர் ஏ.கே.செட்டியார்.
இவர், நமது தேசத்திற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பிரிட்டிஷ் இந்தியா பிரஜையாக பல நாடுகளைச் சுற்றி வந்தவர். அப்போது அவர் எதிர்கொண்ட பல்வேறு அனுபவங்களை தமிழில் வெளியான இதழ்களில் எழுதி வந்தார்.
அதன் தொகுப்பு தான் 'உலகம் சுற்றும் தமிழன்' நூல். இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 2013ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட இந்நூல், 2022 இல் இரண்டாம் பதிப்பைக் கண்டது.
'தமிழில் வெளியான பயண நூல்களில் 'உலகம் சுற்றும் தமிழன்' ஒரு முன்னோடி நூல் மட்டுமல்ல. உலக வரலாற்றை எளிய மொழியில் எடுத்துரைக்கும் வித்தியாசமான நூல். ஏ.கே.செட்டியாரின் மொழி லாவகம் அலாதியானது; அற்புதமானது; ரசிக்கக் கூடியது. ஒரு நாட்டின் அல்லது ஒரு இனத்தின் ஜீவநாடியை ஓரிரு வரிகளில் பதிவு செய்யக்கூடிய ஆற்றல் ஏ.கே.செட்டியாருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது' இப்படி இந்நூல் குறித்து விவரிக்கிறது சந்தியா பதிப்பகம்.
உள்ளடக்கம் என்ன?
இந்நூல் சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி வாங்கி படித்தேன். மிகச் சிறந்த பயண நூல் இது. உலகமெங்கும் ஒலிக்கும் பெயர், ஹாவாய்த் தீவுகள், வெனிஸ், ரோமாபுரி என மொத்தம் 13 பயணக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க பயணத்தின்போது அவர் எதிர்கொண்ட நிற வெறுப்பு குறித்தும் பதிவு செய்திருக்கிறார். வடஅமெரிக்காவில் உள்ள ஹாவாய்த் தீவுகளுக்குச் செல்ல வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்பை உருவாக்குங்க என சொல்கிறார் நூலாசிரியர் ஏ.கே.செட்டியார். இதைப் படிக்கும்போது நமக்கு அந்த இடத்தில் வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி, மரியாதை தரும் விதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. வெனிஸ் பற்றி விவரிக்கும்போது நாமும் இவரது எழுத்துக்களில் அந்நகரைப் போல் மிதக்கிறோம். அவ்வளவு அழகான வர்ணனை.
பல இடங்களுக்கு கப்பலிலும், விமானத்திலும் பல கஷ்டங்களைக் கடந்து பயணம் செய்திருக்கிறார்.
விலை என்ன?
பயணக் கட்டுரைகளை எப்படி எழுத வேண்டும் என அறிய விரும்புபவர்களுக்கும், அந்தக் காலகட்ட பயணம் எப்படி இருந்தது என்பதை அறியவும் இந்நூல் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
பயணத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. இந்நூலின் விலை ரூ.95. நூல் வடிவமைப்பு, எழுத்துப்பிழைகள் அற்ற பதிப்பு வாசிக்கும் அனுபவத்தை அழகாக்குகிறது!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்