'உடலை முறுக்கேற்றும் முருங்கைக்கீரை குழம்பு செய்வது எப்படி?’: எளிய செய்முறைக் குறிப்புகள்
உடலை வலுப்படுத்தும் குழந்தையின்மையைப் போக்க உதவும் முருங்கைக்கீரை குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து எளிய செய்முறைக் குறிப்புகள் குறித்து அறிந்துகொள்வோம்.

முருங்கையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, முருங்கைக்கீரை குழந்தையின்மையைப் போக்குகிறது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, அதிகம் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கப்பயன்படுகிறது. அத்தகைய முருங்கைக்கீரையை வைத்து முருங்கைக் கீரை குழம்பு செய்வது என்பதை எளிமையாக அறிந்துகொள்ளலாம்.
முருங்கைக்கீரை குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
புழுங்கல் அரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
வரமிளகாய் - 2,
எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய வெள்ளைப்பூண்டு - 10 பல்,
சின்ன வெங்காயம் - 15 பல்,
தக்காளி - 1 நறுக்கியது,
நீர் - தேவையான அளவு,
மஞ்சள் - கால் டீஸ்பூன்,
முருங்கைக்கீரை - இரண்டு கப்,
உப்பு - ஒரு டீஸ்பூன்
முருங்கைக்கீரை குழம்பு செய்முறை:
ஒரு அடுப்பில் இருக்கும் சூடான வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். பின், ஒரு டேபிள் ஸ்பூன் அளவு புழுங்கல் அரிசியை அதில் போட்டு மிதமாக வறுத்துக்கொள்ளவும். பின்னர், அதன்மேல், இரண்டு வரமிளகாயைப்போட்டு வறுக்கவும். அனைத்தும் பொன்னிறமானதும் அடுப்பினை அணைத்துவிட்டு ஒரு தட்டில் அதை மாற்றிக்கொள்ளவும். பின் அந்தத் தட்டில் ஒரு கால் டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்துப்போட்டு கலவையை சூடு ஆறவிடவும்.
தற்போது ஒரு மண் சட்டியில் ஒன்றரை டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் அளவு கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தபின், காரத்திற்கு ஏற்றார்போல் வரமிளகாய் சேர்த்துக்கொள்ளவும். அதில் சிறிது கறிவேப்பிலை, நறுக்கிய 10 வெள்ளைப்பூண்டு சேர்த்து வறுத்துவிடவும்.
அவை நன்கு வறுத்தபின், 15 பல் சின்ன வெங்காயத்தை நறுக்கி எண்ணெயில் சேர்த்து வதக்கவும். பின் அதன்மேல், தக்காளியைச் சேர்த்து வதக்கி விடவும்.
இப்போது அந்த தக்காளி நன்கு வெந்துவரவேண்டும். மூடிவைத்து வேகவைத்துவிட்டு அது வேகும் நேரத்தில் எடுத்துவைத்தப்பொருட்களை அரைத்துவிடலாம்.
இப்போது எடுத்துவைத்த துவரம்பரும்பு, புழுங்கல் அரிசி கலவையை நீர் சேர்க்காமல் மிக்ஸியில்போட்டு பொடித்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதனை அரைத்த நேரத்தில் தக்காளியும் வெந்து இருக்கும். பின் ஒரு கப் நீரில், அரைத்தபொடியைச் சேர்த்துவிட்டு, பின், அதனை வதக்கிய பொருட்களுடன் சேர்க்கவும்.
பின்னர் நமக்குத் தேவையான அளவு குழம்புக்கு ஏற்ற நீர் சேர்க்கலாம். அதனைத்தொடர்ந்து கால் டீஸ்பூன் - மஞ்சள், போட்டு கலந்துவிட்டுவிடலாம். அதனை மூடிவைத்துவிட்டு, ஆறு நிமிடங்கள் அடுப்பில் வேகவிடவும்.
குழம்பு கெட்டியாகாமல் இருக்க செய்வது?:
குழம்பு கெட்டியானதுபோல் உணர்ந்தால், ஒரு நான்கு டம்ளர் சூடு படுத்திய நீரை அதில் சேர்த்து இளக்கவும். பின், ஆய்ந்த இரண்டு கப் இளம் முருங்கைக்கீரையை சுத்தம் செய்துவிட்டு, வெந்த குழம்புப் பொருளில் சேர்க்கவும். திறந்துவைத்துதான் முருங்கைக்கீரையை வேகவைக்கவேண்டும். கீரை வேகும்போது, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். பின், 6 முதல் 8 நிமிடத்தில் கீரை நன்கு வெந்து வந்துவிடும். வெந்தபின் பெரியவர்கள் அப்படியே சாப்பிடலாம். குழந்தைகளும் கொடுக்கவேண்டும் என்றால், ஒரு மத்தினை எடுத்து நன்கு கீரையை மசித்துவிடவேண்டும். பின் சிறிது நேரத்தில் அடுப்பினை அணைத்துவிடவும். இப்போது சுவையான முருங்கைக்கீரை குழம்பு ரெடி!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்