Pongal Celebration: மத நல்லிணக்கத்தை முன்னெடுத்த பொங்கல் கொண்டாட்டம்
தமிழ் செய்திகள்  /  latest news  /  Pongal Celebration: மத நல்லிணக்கத்தை முன்னெடுத்த பொங்கல் கொண்டாட்டம்

Pongal Celebration: மத நல்லிணக்கத்தை முன்னெடுத்த பொங்கல் கொண்டாட்டம்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 15, 2023 12:56 PM IST

கோவையில் மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துளளது.

பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார்
பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார்

உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், விளங்கும் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மிகுந்த உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்து தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில் கோவையில், மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

பண்டிகைகள் என்பது வெறும் கொண்டாட்டத்திற்கானது மட்டும் அல்ல. அதுபொது மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் முன்னெடுப்பதுவே நோக்கம் என்பதை காட்டும் வகையில் கோவையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் அதிகாலை முதல் மக்கள் புத்தாடை உடுத்தி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மக்கள் கோயில் களுக்கு சென்று சிறப்பு தரிசனங்களில் பங்கேற்றனர்.

பாரம்பரியம் வாய்ந்த பேரூர் ஆதீன வளாகத்தில் இஸ்லாமிய கிருஸ்துவ மக்கள் இணைந்து பொங்கல் திருநாளை கொண்டாடியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. கோவை பேரூர் ஆதின வளாகத்தில் ஆதீனம் மருதாச்சல அடிகளாருடன் கோவையைச் சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் மற்றும் கிருஸ்தவ இல்லாமிய மதபோதகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இஸ்லாமிய மதரசா மாணவர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். கோவை மாநக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

செபஸ்டியன் ஆலையத்தில் பொங்கல் அலங்காரம்
செபஸ்டியன் ஆலையத்தில் பொங்கல் அலங்காரம்

அதேபோல் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலையத்தில் இன்று நடைபெற்ற பிரார்த்தனைக்கு வந்தவர்கள் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். மேலும் ஆலைய வாசலில் சாணி மெழுகி கோலம் இட்டு மாவிலை தோரணங்களை கட்டினர். மாட்டு வண்டியை அலங்கரித்திருந்தனர். மேலும் தமிழர்களின் பண்பாட்டு இசை கருவிகளை பயன்படுத்தி கிருஸ்தவ பாடல்களை பாடினர். மேலும் திருச்சபை மக்கள் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை வெகுவாக ஈர்த்தது.

அதேபோல் கோவை விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள உள்ள செபஸ்டியன் ஆலையத்தின் உட்பகுதி பொங்கல் திருவிழாவை கொண்டாடும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவையில் மதங்களை கடந்த பொங்கல் விழா கொண்டாடப்படுவது சிறுவர் சிறுமியர்களிடம் மத நல்லிணக்கத்தை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவத்துள்ளனர்.

Whats_app_banner