குர் பராத்தா : குர் பராத்தா! பெயரே வித்யாசமா இருக்கா? சாப்பிட்டு பாருங்கள் சூப்பர் சுவையாக இருக்கும்! இதோ ரெசிபி!
குர் பராத்தா : குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். இது பராத்தா மட்டுமல்ல ஒரு ஸ்னாக்சும் என்பதால் இதை அடிக்கடி செய்வீர்கள். இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

குர் பராத்தா என்பதை அரை வட்ட வடிவில்தான் செய்து எடுக்கவேண்டும். ஏனெனில், மாவை வட்டமாக தேய்த்துவிட்டு ஒருபுறத்தில் பாதியளவில் நெய், வெல்லம் மட்டும் தேங்காயைத் தூவி அதை மறுபுறத்தை வைத்து மூடிவைக்கவேண்டும். இதை இருபுறமும் தோசைக்கல்லில் சேர்த்து வாட்டி எடுக்கவேண்டும். இது இனிப்புச் சுவையில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். இது பராத்தா மட்டுமல்ல ஒரு ஸ்னாக்சும் என்பதால் இதை அடிக்கடி செய்வீர்கள். இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• கோதுமை மாவு – ஒரு கப்
• வெல்லம் – முக்கால் கப் (துருவியது)
• நெய் – கால் கப்
• ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு (5 ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் சேர்த்து அடித்து பொடித்துக்கொள்ளவேண்டும்)
• உப்பு – தேவையான அளவு
• தேங்காய்த் துருவல் – ஒரு கப்
செய்முறை
1. ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சிறிது உப்புத்தூள் சேர்த்து கிளறிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும்.
2. இதை ஒரு ஈரத்துணியால் மூடி 15 நிமிடங்கள் ஊறவிடவேண்டும்.
3. 15 நிமிடங்கள் கழித்து எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக பகுத்துக்கொள்ளவேண்டும். மீண்டும் மூடி வைத்துவிடவேண்டும்.
4. ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக்கொள்ளவேண்டும். சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் வட்ட வடிவில் தேய்த்துக்கொள்ளவேண்டும்.
5. கால் ஸ்பூன் நெய்யை எடுத்து தேய்த்து வைத்துள்ள மாவில் பாதியளவுக்கு தடவவேண்டும்.
6. அதன் மேல் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி மற்றும் வெல்லத் துருவலை தூவவேண்டும். நெய்யின் பிசுபிசுப்புத்தன்மையால் இவை நன்றாக மாவுடன் ஒட்டிக்கொள்ளும்.
7. பின்னர் அடுத்த பாதியை இந்த ஸ்டஃப் உள்ள பாதியின் மேலே வைத்து மூடிவேண்டும். ஓரங்களை நன்றாக மூடிவிடவேண்டும். அவை சரியாக மூடப்படாவிட்டால், தோசைக்கல்லில் சேர்த்து வாட்டும்போது, அது வெளியே வந்து தவாவில் சேர்ந்து கருகி பராத்தாக்களை நாசமாக்கிவிடும். எனவே உள்ளே வைத்த ஸ்டஃபிங் வெளியே வராத அளவுக்கு நன்றாக ஒட்டவேண்டும். ஒரு ஃபோர்க்கை வைத்து கூட ஓரங்களில் ஒட்டலாம்.
8. அடுப்பில் தோசைக்கல்லை சூடாக்கி, செய்து வைத்துள்ள பராத்தாக்களை சேர்த்து இருபுறமும் பிரட்டி எடுக்கவேண்டும். நெய்யை இருபுறதுத் தடவிவிடவேண்டும். இருபுறமும் நன்றாக பொன்னிறமானவுடன் எடுத்து பரிமாறினால் சூப்பர் சுவையான குர் பராத்தாக்கள் தயார்.
இதேபோல் அனைத்து பராத்தாக்களையும் தயாரித்துக்கொள்ளவேண்டும். இந்த பராத்தாக்கள் இனிப்பு சுவையானதாக இருப்பதால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது இனிப்பு என்பதால் இதற்கு தொட்டுக்கொள்ளவென்று எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட இனிப்பும், காரமும் சேர்ந்து சுவை அள்ளும்.

டாபிக்ஸ்