Tamil News  /  Tamilnadu  /  Income Tax Department Raids 40 Places Linked To Minister Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

Breaking : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

26 May 2023, 8:09 ISTDivya Sekar
26 May 2023, 8:09 IST

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் இருந்தது. 

இதுகுறித்து எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கிய நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும் , சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . ஆனால், இதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், மறுபடியும் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது. அதேபோல, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்கு குழுவை அமைத்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடுகளில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, கரூர், கோவை உட்பட அவர் தொடர்புடைய 40 இடங்களில் சுமார் 300 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்