ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் கூகுள்...எப்படி தெரியுமா?
கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேடுதல் அம்சம் மூலம் ஆங்கிலம் தெரியாதவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளலாம். அதேசமயம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் தங்களது மொழி ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் நிகழ்ச்சியில் ஜிமெயில், கூகுள் டாக்ஸ் தொடர்பான முக்கிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதற்கிடையே கூகுள் சேவைகளில் ஒன்றான கூகுள் தேடலில் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்களது ஆங்கில புலமையை மேம்படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஆங்கிலம் கற்க நினைப்பவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
"தங்களது அன்றாட வாழ்க்கையிலும், உலகம் முழுவதும் கூகுள் டிரெண்டிங்கில் தேடப்பட்ட ஆங்கில வார்த்தைகளின் விளக்கங்கள் மற்றும் புதிய வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்துகொள்வதன் மூலம் ஆங்கில மொழி உங்களது ஆர்வத்தை தூண்டக்கூடியதாக அமையும்" என கூகுள் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளது.
எளிமையாக கூற வேண்டுமானால் கூகுள் தேடுதல் அம்சம் பயனாளர்கள் புதிய ஆங்கில வார்த்தைகள் மற்றும் அர்த்தங்களை நோட்டிபிக்கேஷன்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம். அதற்கு முதலாவதாக சந்தாதாரராக மாறுவது அவசியம். அவ்வாறு மாறிய பின்னர் நாள்தோறும் புதிய வார்த்தைகள் மற்றும் அர்த்தங்கள் குறித்த நோட்டிபிக்கேஷன் தோன்றும்.