Vairamuthu: ‘ஆக்டோபஸ் கரங்கள்.. கண்ணீர் வடிக்கிறேன்’ - வைரமுத்து சோக பதிவு!
பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன - வைரமுத்து!
சென்னையில் மிகவும் பிரலமான திரையரங்காக இருந்து வந்தது உதயம் தியேட்டர். அசோக் நகரில் அமைந்துள்ள அந்த திரையரங்கில் மொத்தம் 4 திரைகள் இருக்கின்றன. குறைந்த விலையில் படம் பார்க்க ஏதுவாக இந்த திரையரங்கம் இருந்த காரணத்தால், இங்கு நடுத்தர மக்களின் வரத்து அதிகமாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் வந்த மல்டிப்ளக்ஸ் - களின் எண்ணிக்கையாலும், ஓடிடியின் வரத்தாலும் பல திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது உதயம் திரையரங்கமும் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து பாடலாசியர் வைரமுத்து தன்னுடைய சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், “முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது
இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்
நன்றி உதயம்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, கவிஞர் வைரமுத்து போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் பற்றி குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசும் போது, “நமது வாழ்க்கை எந்த மாதிரியான சுற்றுப்புறத்தில் வளர்கிறது என்பதுதான், நம் ஒழுக்கத்தினுடைய மிகப்பெரிய குணம். என்னிடம் ஒழுக்கத்தைப் பற்றி கேட்கும் பொழுது, சாட்சி இல்லாத இடத்தில் ஒழுக்கமாக இருப்பது என்று சொல்லி இருக்கிறேன்.
நான் தனியாக இருந்திருக்கிறேன். 7 நட்சத்திர ஹோட்டல்களில் எல்லாம் என்னை வெளிநாட்டு நண்பர்கள் தங்க வைத்திருக்கிறார்கள். அங்கு நிறைய பழங்கள், குளிர்பானங்கள் மது பாட்டில்கள் உள்ளிட்ட பலவை இருக்கும். குறிப்பாக, மதுவில் விலையுயர்ந்த மதுபானங்கள் இருக்கும்.
அதனை நான் பார்த்து அதன் நிறங்களில் வேறுபாடு இருக்கிறதா என்று ரசிப்பேன். அவ்வளவுதான் எனக்கும் மதுவுக்கும் இடையே உள்ள ஈடுபாடு. அந்த நிறங்களிலிருந்து, கவிதைக்கு ஏதாவது சாரம் கிடைக்கிறதா என்று பார்ப்பேன்.
நான் இந்த உலகத்தில் மிகவும் அதிகமாக, இது இந்த நிறம் என்று சொல்ல முடியாத நிறங்கள், அதாவது அந்த நிறங்களை பெயர் சொல்லி அழைக்க முடியாது. அது, அப்படியான ஒரு நிறத்தில் இருக்கும். அப்படித்தான் தனியாக இருக்கும் பொழுது, என்னால் ஒழுக்கமாக இருக்க முடிகிறது.
சிறு வயதிலிருந்து மதுவால் சீர்குலைந்த குடும்பங்களை, மனிதர்களை நான் பார்த்து வளர்ந்து இருக்கிறேன். அவர்கள் படும் அவமானங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் குடும்பத்தில் ஏற்படுகிற குழப்பங்களை கண்டிருக்கிறேன். நீங்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியேறாக விட்டால் உங்கள் இல்லற வாழ்க்கைக்கு கூட பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
உங்களை நம்பி வரும் பெண்ணை நீங்கள் முழுமை செய்யாதவனாக இருப்பீர்கள் என்றால், அவளுக்கு நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தமாகும். ஒரு பெண்ணை நிறைவு செய்வதும், முழுமை செய்வதும் அவளை மதிக்கின்ற பணிகளில் ஒன்றாகும்.
மனைவிக்கு மலர்களை வாங்கித் தருவது, தங்கம் வாங்கித் தருவது, இனிப்பு வாங்கி தருவது மட்டுமே ஒரு கணவனின் பெரும் செயல் அல்ல. உங்களிடம் அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியும். அதை நீங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றால், போதை பழக்கத்தை விட்டு தயவு செய்து வெளியேறுங்கள். நிகழ்கால தாம்பத்தியத்தை அது பாதிக்காவிட்டாலும், எதிர்கால தாம்பத்தியத்தை அது கண்டிப்பாக பாதிக்கும்.
தாம்பத்தியம் குறைபட்டு போனால் வாழ்வில் ஒரு குறை வரும் குறை. இந்தக் குறை உங்களை எந்தெந்த துன்பங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது உங்களுக்கே தெரியாது . சில ஆண்கள் மற்றும் பெண்களின் வாக்குமூலங்களை கேட்டு, சில துயரங்களை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த துயரங்களுக்கு புதிய தலைமுறை ஆட்பட்டு விடக்கூடாது” என்று பேசினார்.
டாபிக்ஸ்