Jeyamohan on Sivakumar: ‘ நல்லவர்னு தெரிஞ்சும் ஏன் வன்மம்.. இவங்கெல்லாம் யோக்கியர்களா? - சிவகுமார் குறித்த ஜெயமோகன்!
சிவக்குமார் தன் பாலியகால நண்பர் ஒரு சால்வையை போர்த்தியபோது, இயல்பாக அவர் போய்யா என தட்டிவிட்ட ஒரு சிறு காணொளித் துணுக்கு வெளியானதும், வசைகள் கொட்டின.
நடிகர் சிவகுமாரை பலரும் வசைபாடுவது குறித்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.
நடிகர் சிவகுமாரை ஏன் வசைபாடுகிறார்கள்? என்பதைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன் கட்டுரையில் எழுதியிருப்பதாவது:
“பெரும்பாலானவர்களுக்குத் தெரியும், நடிகர் சிவக்குமார் பற்றி. ஒழுக்கமானவர், இனியவர், தன் வாழ்நாளில் எவரையும் ஏமாற்றாதவர், பெரியவர் சிறியவர் என வேறுபாடு காட்டாதவர், தனிவாழ்க்கையிலும் சாதிநோக்குக்கு அப்பாற்பட்டவர்,
திரைவாழ்க்கையில் எவருக்கும் எந்நிலையிலும் எந்த இழப்பையும் உருவாக்கலாகாது என்பதில் உறுதிகொண்டவர், பிறரை பாராட்ட மட்டுமே செய்பவர், அத்துடன் திரையுலகில் உண்மையிலேயே பெரும் அறப்பணிகளைச் செய்பவரும்கூட.
ஆனால் அவரையும் வசைபாடுவார்கள். காரணம், அவர் தன் தொழிலும், வாழ்விலும் வெற்றிபெற்றவர் என்பது மட்டுமே.
உதாரணமாக, சிவக்குமார் தன் பாலியகால நண்பர் ஒரு சால்வையை போர்த்தியபோது, இயல்பாக அவர் போய்யா என தட்டிவிட்ட ஒரு சிறு காணொளித் துணுக்கு வெளியானதும், வசைகள் கொட்டின.
அவர் தன் பாலியகால நண்பர் என சிவக்குமார் ஆதாரபூர்வமாகச் சொன்ன பிறகும் கூட, எவரேனும் அந்த வசைகளுக்காக வருந்தினார்களா? இல்லை, மீண்டும் வசை. இந்த வசைபாடுபவர்கள் எல்லாம் அத்தனை யோக்கியர்கள் என்றால் நாடு இப்படியா இருக்கும்?” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நடந்தது என்ன?
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் வயதான ரசிகர் ஒருவர், சிவகுமாரை சந்தித்து அவருக்கு சால்வையை அணிவிக்க முயன்றார். அப்போது சிவகுமார் அவரிடமிருந்து அந்த சால்வையை வாங்கி தூக்கி வீசிவிட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்னுடைய தவறுதான். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என வீடியோ வெளியிட்டு நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக சிவகுமார் வெளியிட்ட்ட வீடியோவில், 'காரைக்குடியில் நடந்த சால்வை சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்திருப்பீர்கள். இவர் யாரோ எவரோ கிடையாது. என்னுடைய தம்பி. 50 ஆண்டுகால நண்பர். 1971-ல் மன்னார்குடியில் நாடகத்துக்கு தலைமை தாங்க சென்றேன்” என்றார்.
இடையில் குறுக்கிட்ட கரீம், “அண்ணன் மன்னார்குடி வந்தார். அவரை வரவேற்றவன் நான் தான். நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடித்துவிட்டு ஊருக்கு போக வேண்டும் என்றார். சாப்பிடவேயில்லையே என்றேன். ‘நான் எப்போதும் சாப்பிடும் வெங்காயமும், தயிர் சோறும் கொடுத்தால் போதும்’ என்றார். அவருடைய திருமணத்தில் நான் கலந்துகொண்டு வந்தவர்களை வரவேற்றேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய சிவகுமார், 'கரீமின் திருமணத்தையே நான்தான் நடத்தி வைத்தேன். இவருடைய மகள், பேரன் திருமணத்துக்கும் நான் சென்றுள்ளேன். பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை அணிவிக்க வந்தால், அதை திருப்பி அவர்களுக்கே போர்த்தி விடுவேன். அன்றைக்கு பலரும் பேசிய பின் கடைசியாக நான் பேசினேன். நிகழ்ச்சி முடியும் போது மணி 10 ஆகிவிட்டது. மிகவும் சோர்வாக இருந்தேன்.
அப்போது கரீம் அங்கு நின்றிருந்தார். எனக்கு சால்வை போடுவது பிடிக்காது என தெரிந்தும், சால்வையோடு நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது நான் செய்த தவறுதான். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்." என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்