தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Women's Day 2023: Aparna Sen Triumphed In The Challenging Film Industry!

Women's day 2023: சவாலான திரைத்துறையில்ஜெயித்துகாட்டினார் அபர்ணா சென்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 09, 2023 02:32 PM IST

சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருதுகள் ஒன்பதும், சிறந்த இயக்குநருக்கான ஒன்பது பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

அபர்ணா சென்
அபர்ணா சென்

ட்ரெண்டிங் செய்திகள்

அபர்ணா சென் (பெங்காலி)

2002 ஆம் வருடம் ஒரு திரைப்படம் சென்னை திரையரங்குகளில் வெளியாகி கலக்கிக் கொண்டிருந்தது. அது என்ன மொழிப்படம் என்பதில் அனைவருக்கும் ஒரு குழப்பம் இருந்தது. சிலர் அது ஹிந்திப்படம் என்றனர். சிலர் அதைத் தமிழ்ப்படம் என்றனர். வேறு சிலரோ பெங்காலிப் படம் என்றனர். உண்மையில் அது ஆங்கில மொழிப்படம். ஒரு திரைப்படத்திற்கு மொழி முக்கியமல்ல என்பதை அந்தப் படம் நிரூபித்தது. கதாநாயகி தமிழில் பேசுவாள். கதாநாயகன் பெங்காலி, ஆங்கிலம் பேசுவான். மற்றவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என்று கலந்து பேசுவார்கள். மொழி எனும் எல்லையை மீறி மாபெரும் வெற்றி பெற்ற படம் அது.

படத்தின் பெயர்: மிஸ்டர் & மிஸஸ் ஐயர்,

இயக்குநர்: அபர்ணா சென்

ஒரு ஆசாரமான பிராமண தமிழ்ப்பெண் தன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டு வெகு தூரத்தில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்ப பஸ்ஸில் குழந்தையுடன் பயணம் செய்கிறாள். அவளின் பெற்றோர்கள் அந்த பஸ்ஸில் பயணம் செய்யும் பக்கத்து சீட் இளைஞனிடம் அவர்களை பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள். அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் அவளுக்கு எல்லா வகையிலும் உதவி செய்கிறான். ஒரு கட்டத்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இளஞன் ஒரு முஸ்லிம் என்று தெரிய வந்தவுடன் அந்தப்பெண்ணின் போக்கே மாறி விடுகிறது. அவனிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

அப்போது பயண வழியில் இந்து முஸ்லிம் கலவரம் வெடிக்கிறது. பஸ்ஸில் சிலர் ஏறி முஸ்லிம்களை அடையாளம் கண்டு அவர்களை கொல்ல முயல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த இளஞனைக் காப்பாற்ற அவன் தனது கணவன் என்று கலவரக்காரர்களிடம் பொய் சொல்கிறாள் அவள். வழியில் கலவரம் பெரிதாகவே அவர்கள் இருவரும் ஒரு விடுதியில் தங்க நேர்கிறது. ஒரே ஒரு அறைதான் கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக அந்த இளைஞனுடன் தங்குகிறாள் அவள். அந்த இளைஞன் ஒரு வைல்ட்லைஃப் போட்டோகிராபர்.

அவன் அந்த குழந்தையை வெளியே எடுத்துச்சென்று விளையாடுகிறான். படம் எடுக்கிறான். இதை ஜன்னல் வழியாக பார்க்கும் அவள் மனம் மாறுகிறது. அவனுடன் கொஞ்சம் நட்புடன் பழக ஆரம்பிக்கிறாள். அவன் அவளையும் பல கோணங்களில் படம் பிடிக்கிறான். பின்னர் ராணுவத்தின் உதவியுடன் அவர்கள் ரயிலில் ஊருக்கு திரும்புகிறார்கள். ரயில் பயணம் அவர்கள் நட்பு வளர உதவுகிறது. அவர்கள் நட்பு காதலாக மாறும் ஒரு தருணத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்து விடுகிறது. அவளின் கணவன் அவளுக்காக காத்திருக்கிறான். இருவரும் கலங்கிய மனத்தோடு விடைபெறுகிறார்கள். அந்த இளைஞன் தான் எடுத்த படங்கள் கொண்ட பிலிம் ரோலை அவளிடம் தருகிறான்.

இந்தப்படத்தின் தன் மகளான கொங்கனா சென் சர்மாவையே கதாநாயகியாக நடிக்க வைத்தார் அபர்ணா சென்.

அபர்ணா சென் இயக்கத்தில் ஒரு காட்சி
அபர்ணா சென் இயக்கத்தில் ஒரு காட்சி

சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது என்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் இந்திய திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே பெண்கள் இயக்குனர்களாகியுள்ளார்கள். அதிலும் வெற்றி பெற்ற இயக்குனராக வேண்டுமென்றால் அவர்கள் குடும்ப வாழ்க்கை உட்பட தனக்கான எல்லா விஷயங்களை இழக்க நேரிடும். இவையனைத்தையும் மீறி ஜெயித்துக்காட்டினார் அபர்ணா சென்.

அபர்ணா சென், இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகையுமாவார். 1960, 1970 களில் வங்கமொழிப்படங்களில் இவர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர், முக்கியமாக சத்யஜித்ரேவின் பல படங்களில் இவர் கதாநாயகி. அபர்ணா சென் 1961 இல் தீன் கன்யா என்ற வங்காளப் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆயினும் 1969 இல் அபராஜிதா எனும் சத்யஜித்ரேவின் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. 1970 இல் வெளிவந்த ஆரண்யா தின் ராத்திரி (1970) என்ற திரைப்படத்தின் மூலம் வங்காளத்தின் சிறந்த நடிகையாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

1981 முதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கூடுதலாக திரைப்படங்களை இயக்கவும் செய்தார். இவர் இயக்கிய முதல் படம் 36 சௌரிங்கீ லேன் என்பதாகும். இப்படம் இவருக்கு சிறந்த இயக்குநருக்கான தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத் தந்தது. மேலும் பரோமா, சதி, யுகாந்த், பரோமிதார் ஏக் தின், மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர், தி ஜப்பனீஸ் வைஃப், இதி மிருணாளினி, கொய்னார் பாக்‌ஷோ, ஆகிய படங்கள் ஒரு சிறந்த வெற்றி இயக்குநராக இவரை அடையாளப்படுத்தியது. மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் படத்துக்காக தன் இரண்டாவது தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றார்.

வங்காள மொழியில் பல திரைப்படங்களை இயக்கியுள்ள அபர்ணா சென் பன்முகத் தன்மை உடையவர். நாடகம் மற்றும் திரை நடிகை, திரை எழுத்தாளர், திரை இயக்குனர். பெங்காலி பத்திரிகையான சனந்தாவில் அவர் ஆசிரியையாக பல வருடங்கள் இருந்தார். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் தன் முத்திரையை ஆழமாகப் பதித்தார்.

தன்னுடைய பதினாறாவது வயதில் சத்தியஜித் ரே இயக்கிய ‘தீன் கன்யா’ எனும் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கிய இவர் தன்னுடைய கனவு சினிமாதான் என்பதில் உறுதியாக இருந்தார். பல நாடக மேடைகளிலும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இவர் சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருதுகள் ஒன்பதும், சிறந்த இயக்குநருக்கான ஒன்பது பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் நான்காவது சீரிய விருதான பத்மஸ்ரீ விருதினை 1987 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு வழங்கி கெளரவித்தது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்