மதுரை விமான நிலையத்தில் விஜய் வருகை.. அத்துமீறிய பவுன்சர்கள்.. செய்தி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு!
மதுரை விமானநிலையத்தில் விஐபி கேட் முன்பு, விஜயைப் பார்க்கமுடியாதவாறும், செய்தி சேகரிக்க விடாமலும் தடுத்திருக்கின்றனர், பவுன்சர்கள்.

மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த விஜய்: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் ஜனநாயகன் படப்பிடிப்பினை முடித்து விட்டு, நடிகர் விஜய் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்றார். அப்போது மதுரை விமானநிலையத்தில் டிவி சேனலின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. நடிகர் விஜய்யின் 69ஆவது படமான இப்படத்துடன், நடிகர் விஜய் அரசியலில் முழுமூச்சாக கால் பதிக்கப்போகிறார். அதனால், ஜனநாயகன் படம் தான் நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக இருக்கும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக, இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த நடிகர் விஜய்க்கு, அவரது ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் தடபுடலான வரவேற்பினைக் கொடுத்தனர். சிலர் அவரது வாகனங்களை ஃபாலோவ் செய்யவும் செய்தனர்.
