HBD Yesudas: 'இசைக்கு இதமான இடம் தந்த குரலோன்' ஜேசுதாஸ் எனும் இசைதாசன்!-voice that gave a pleasant place to music yesudas - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Yesudas: 'இசைக்கு இதமான இடம் தந்த குரலோன்' ஜேசுதாஸ் எனும் இசைதாசன்!

HBD Yesudas: 'இசைக்கு இதமான இடம் தந்த குரலோன்' ஜேசுதாஸ் எனும் இசைதாசன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 10, 2024 04:50 AM IST

உலகம் முழுக்க மக்களை தனது குரலால் மயக்குபவர். வசீகர குரலுக்கு சொந்தகாரர். பிரபல திரைப்பட இசை பாடகராகவும் கர்நாடக இசை கலைஞராகவும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சாதனை செய்பவர்.

யேசுதாஸ் பிறந்த நாள்
யேசுதாஸ் பிறந்த நாள்

உலகம் முழுக்க மக்களை தனது குரலால் மயக்குபவர். வசீகர குரலுக்கு சொந்தகாரர். பிரபல திரைப்பட இசை பாடகராகவும் கர்நாடக இசை கலைஞராகவும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சாதனை செய்பவர்.

இளமைப்பருவம். 

1945 ஜனவரி 10 அன்று கேரள மாநிலம் கொச்சியில் மெல்லிசை கலைஞர் அகஸ்டைன் யோசப் மற்றும் அலைசுகுட்டி க்கு மகனாக பிறந்தவர். தனது தந்தை, ஹரிஹர சுப்பிரமணியம், வைத்தியநாத பாகவதர் ஆகியோரிடம் இசை பயின்றவர். கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையில் வல்லமை பெற்றார். தனது பதினாறு வயதிலேயே தனது முதல் பாடலை சீனிவாசன் இசையில் பாடினார். கால்பாடுகள் என்ற திரைப்பட பாடல்கள் தான் திரைத்துறையில் பலராலும் தேடப்படும் பாடகராக மாற்றியது.

தமிழ் மொழியில் முதல் பாடலை பொம்மை என்ற படத்தில் பாடினாலும் கூட இவரது குரலில் வேதா இசையில் கொஞ்சும் குமரி முதலில் வெளிவந்த படமாக அமைந்தது. இந்தியில் கோடிசிபாத் என்ற படம் முதல் படமாக அமைந்தது. இளம் வயதிலேயே அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 1970 க்கு பின் இந்தி உள்ளிட்ட வடமொழி பாடல்களையும் பாடி தேசிய அளவில் பிரபலமான பாடகர் ஆனார். 

கடல் தாண்டி ரஷ்யா, அரபு, மலாய், லத்தீன், ஆங்கிலம் என்று தனது குரலை உலகெங்கும் கேட்க செய்தார். இந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தனது இசை பயணத்தில் ஐம்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். தனது 29 வது வயதில் பிரபா என்பவரை மணந்தார். மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் விஜயும் பாடகர் ஆவார். 1980 ல் தரங்கினி என்ற பெயரில் ஒரு இசை நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் தனது திரைப்பட பாடல்கள், தனிப்பட்ட பாடல் ஆல்பம், ஆன்மிக பாடல்கள் இசைத்தட்டுகளை வெளியிட்டனர்.

இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் அதிக அளவில் ஐயப்பன் பக்தி பாடல்களை பாடியவர் இவர் தான். இசை என்பது அற்புதமான கலை. அதற்கு மொழி, மதம், இனம் எதுவும் கிடையாது என்று நிருபித்தவர். 

 இந்தியாவில் அதிக தேசிய விருதுகளை அள்ளி கொண்ட பாடகர். பல மாநில அரசுகள்சிறந்த பாடகராக தேர்வு செய்து கௌரவித்துள்ளனர். சாகித்திய அகாடமி விருது, பத்மஶ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகள் பெற்றவர்.

கண்ணே கலைமானே என்று நம்மை தாலாட்டுவது ஆகட்டும்.. விழியே கதையெழுது என்று உருகுவதாகட்டும்.. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்று அழுகுவதாகட்டும்.. ராஜராஜ சோழன் நான் என்று துள்ளல் ஆகட்டும்.. தெய்வம் தந்த வீடு என்று வலி ஆகட்டும்.. என் இனிய பொன் நிலாவே என்று மயக்குவதாகட்டும்.. வைகை கரை காற்றே நில்லு என்று கெஞ்சுவதாகட்டும்.. செந்தாழம்பூவில் மலர்ச்சியாகட்டும்.. தென்றல் வந்து வருடுவதாகட்டும்.. ஆராரிரோ பாடியதாரோ என அழுகையாகட்டும்... ஹரிவராசணம்.. சரணம் ஐயப்பா என்று பக்தியில் திளைப்பது ஆகட்டும இப்படி உணர்வு களை நம் இதயத்துக்குள் கடத்தும் கான கந்தர்வன்.

அதிசய ராகம். ஆனந்த ராகம்.. அழகிய ராகம். அபூர்வ ராகம்.. என்று அவர் பாடிய பாடலே அவருக்கு பொருந்தும். இன்று பலரின் ரிங் டோன் அவரது குரல் தான்.. உறக்கம் வராத பலருக்கு அவரது குரலே தாலாட்டு..  தனிமையில் வாடும் பலருக்கு ஆறுதல்.. பயணத்தில் துணையாக… இப்படி எங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தேனினும் இனிய குரலாய்.. அன்று கேட்ட அதே காந்த குரல் அறுபது தாண்டியும் காலத்தால் மாறாத குரல் நூறாண்டு ஒலிக்க வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.