Vishnu Vishal: அப்பா மீது புகார் கொடுத்த சூரி.. ‘ நானும் அவரும் பயங்கரமா பேசுனோம்.. ஆனா இப்ப..’ - விஷ்ணு விஷால்!
எல்லாமே ஒரே சமயத்தில் தவறாக நடக்கும் என்று சொல்வார்கள் இல்லையா? அப்படித்தான் அதுவும் நடந்தது. ஆனால் அது எல்லாமே தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இங்கு தவறு செய்யாத மனிதர்களை கிடையாது!.

விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் தன்னிடம் நில மோசடி செய்ததாக கூறி, நடிகர் சூரி அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையில் சூரி மீது கோபம் கொண்ட விஷ்ணு, பேட்டிகளில் சூரியை மிகவும் சாடியிருந்தார்.
இதனால் இருவருக்குள்ளே இருந்த நட்பு முறிந்து போனது அப்பட்டமாக தெரிந்தது. தற்போது விஷ்ணு நடிப்பில் வெளியாக இருக்கக்கூடிய லால் சலாம் படம் தொடர்பாக, அவர் பேட்டிகள் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் சூரிக்கும் தனக்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, “எனக்கும் சூரிக்கும் இடையே என்ன நடந்தது என்பது குறித்தான விவரங்கள் கூடிய சீக்கிரமே வெளி வரும். என்னுடைய வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்கள் மிக மிக கடினமானவையாக இருந்தன. ஆம், அந்த காலக்கட்டத்தில்தான் என்னுடைய முன்னாள் மனைவியுடன் எனக்கு விவாகரத்து ஏற்பட்டது. சூரிக்கும் எனக்கும் இடையேயான பிரச்சினை பெரும் சர்ச்சையாக வெடித்தது.
எல்லாமே ஒரே சமயத்தில் தவறாக நடக்கும் என்று சொல்வார்கள் இல்லையா? அப்படித்தான் அதுவும் நடந்தது. ஆனால் அது எல்லாமே தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இங்கு தவறு செய்யாத மனிதர்களை கிடையாது!.
ஆனால் அவர்கள் அந்தளவு கோபப்படும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை... தற்போது எல்லாமே முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது சூரிக்கும் எனக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கிறது. அவர் என்னுடைய பையன் ஆர்யன் குறித்து கேட்பார்.
நாம் கோபத்தை நம் மனதுக்குள்ளேயே வைத்திருந்தால்,அது நம்மை வேறொரு மனிதராக மாற்றி விடும்.சூரி உடனான பிரச்சனையில் நானும் அவரும் உட்கார்ந்து பயங்கரமாக பேசினோம். அப்போது எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் ஒத்துக் கொண்டோம்.
பிரச்சினை என்று ஒன்று வந்து விட்டால், என் மீது உள்ள தவறுக்கு நான் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பேன். அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில், அதையும் எடுத்துக்காட்டுவேன். அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதற்காக மன்னிப்புக் கேட்கவும் நான் தயங்கமாட்டேன்.
கண்டிப்பாக அவருடன் நான் தொடர்ந்து படங்கள் நடிப்பேன். எங்கள் இருவருக்குள்ளும் நடந்த விஷயங்களை மறந்து நாங்கள் தற்போது நன்றாகவே பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று பேசினார்.

டாபிக்ஸ்