தமிழ் சினிமா ரீவைண்ட்: விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய்சேதபதி சூப்பர் ஹிட்கள்.. மே 1 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய்சேதபதி சூப்பர் ஹிட்கள்.. மே 1 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

தமிழ் சினிமா ரீவைண்ட்: விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய்சேதபதி சூப்பர் ஹிட்கள்.. மே 1 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 01, 2025 05:45 AM IST

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால், பொது விடுமுறை நாளான இன்று முந்தைய ஆண்டுகளில் ரஜினிகாந்த், விக்ரம் என முன்னிணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு ஆண்டுகளில் மே 1இல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

வசூலை குவித்த விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்.. மே 1 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
வசூலை குவித்த விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்.. மே 1 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

தில்லு முல்லு

மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், செளகார் ஜானகி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி படமாக 1981இல் வெளியான படம் தில்லு முல்லு. தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக இருந்து வரும் தில்லு முல்லு இன்று வரையிலும் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது.

1979இல் வெளியான இந்தி படமான கோல்மால் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். தேங்காய் சீனிவாசனின் எதார்த்த நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கமல்ஹாசன் க்ளைமாக்ஸில் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் இந்திய சினிமாவின் சிறந்த நடிப்பை பெர்மான்ஸை கொண்ட டாப் 25 படங்களின் ஒன்றாக போர்ஸ் லிஸ்டில் இடம்பிடித்தது.

சாமி

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, கோட்டா சீனிவாச ராவ், விவேக் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்சன் திரைப்படமாக 2003இல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் சாமி. விக்ரமின் அதிரடியான நடிப்பு, த்ரிஷாவின் க்யூட் தோற்றம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மாஸ் படமாக சாமி இருந்தது.

தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் போலீஸ் வேடம் ட்ரெண்டாகி இருந்த சமயத்தில் ரிலீசான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. விறுவிறுப்பான திரைக்கதை படத்தை, திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் படத்தை ரசிக்க வைத்தன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானதுடன், பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. தமிழில் ஹிட்டான இந்த படம் பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. விக்ரமின் சாமி படம் அந்த காலகட்டதிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ. 25 கோடி வரை வசூலை ஈட்டியது.

பசங்க

பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், வேகா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகி 2009இல் ரிலீசான படம் பசங்க. பள்ளி சிறுவர்களுக்கு இடையிலான சண்டை, சச்சரவுகள், பின்னணி காதல், பேமிலி செண்டிமென்ட் போன்ற பல்வேறு அம்சங்களுடன் அமைந்திருக்கும் படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து சிறந்த படம் உள்பட மூன்று தேசிய விருதுகளை வென்றது. அத்துடன் இரண்டு தமிழ்நாடு அரசின் விருதுளையும் வென்றது. எதார்த்தமான காட்சிகளுடன் அமைந்திருந்த படத்தின் கதை கோடை விடுமுறைக்கான ட்ரீட்டாக அமைந்தது.

சூதுகவ்வும்

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து பிளாக் காமெடி பாணியில் ஹெய்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி 2013இல் ரிலீசான படம் சூதுகவ்வும். சிறு பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய் சேதுபதிக்கு பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட்டாக அமைந்தது.

படத்தின் காமெடியும், திருப்பமான காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சந்தோஷ் நாரயணன் இசை படத்துக்கு பக்கபலமான அமைந்ததோடு, படத்தின் பின்னணி இசை பலரின் ரிங்டோனாகவே மாறியது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் குறைந்த செலவில் உருவாகி ரூ. 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.

எதிர்நீச்சல்

ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா ஸ்வேதா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காதல் கலந்த ஸ்போர்ட்ஸ் காமெடி ட்ராமா படமாக உருவாகி 2013இல் சூதுகவ்வும் படத்துக்கு போட்டியாக ரிலீசானது. தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பு, காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வரவேற்பை பெற்றது.

விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றது. அனிருத் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. படத்தில் இடம்பிடித்த ஒரு குத்து பாடலில் தனுஷ், நயன்தாரா ஆகியோர் நடனம் ஆடியிருப்பார்கள். சிவகார்த்திகேயனுக்கு முதல் மிக பெரிய ஹிட் படமாக எதிர்நீச்சல் அமைந்தது.