தமிழ் சினிமா ரீவைண்ட்: நடனத்தில் கலக்கிய விஜயகாந்த்.. ஏப்ரல் 16 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
ஏப்ரல் 16ஆம் தேதிக்கு முந்தைய ஆண்டுகளில் விஜயகாந்த், கார்த்திக், பார்த்திபன் ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

ஏப்ரல் 16, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விஜயகாந்த் நடித்த பரதன், கார்த்திக் நடித்த பொண்ணுமணி, பார்த்திபன் இயக்கி நடித்த உள்ளே வெளியே போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்ற இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்
பரதன்
சபாபதி இயக்கத்தில் விஜயகாந்த், பானுப்பிரியா நடித்து ஆக்சன் திரைப்படமாக 1992இல் வந்த படம் பரதன், இந்தியில் சூப்பர் ஹிட்டான காயல் என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் தமிழிலு் 100 நாள்களுக்கு மேல் ஓடி ஹிட்டானது. இந்தி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்கு ஏற்றார் போல், விஜயகாந்த் ரசிகர்களை கவரும் விதமாக பல மாற்றங்களுடன் படத்தை உருவாக்கியிருந்தார்கள். அந்த வகையில் படம் நன்கு ஒர்க் அவுட்டானது.
உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எப்போதும் நடிகர் விஜயகாந்த் முன் வந்து நிற்பார். அதேபோல ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் இந்த திரைப்படத்தின் இயக்குநரான சபாபதிக்கு இது முதல் படம். புது இயக்குநரை வைத்து வெற்றிப் படத்தைக் கொடுத்தார் விஜயகாந்த்.
இளையராஜா இசையில் படத்தில் இடம்பிடித்த புன்னகையில் மின்சாரம் என்ற பாடலில் விஜயகாந்த் - பானுப்பிரியாவின் தெறிக்கவிடும் நடனம், பாடலின் மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அசாதரணா டான்ஸ் மூவ்மெண்ட்களை அசால்டாக வெளிப்படுத்தி வேற லெவலில் நடனமாடியிருப்பார் விஜயகாந்த். இன்றைய தலைமுறையினரால் யூடியூப்பில் அதிகம் ரசிக்கப்படும் பாடலாக இது இந்த பாடல் அமைந்துள்ளது
உள்ளே வெளியே
பார்த்திபன் இயக்கி நடித்து க்ரைம் த்ரில்லர் படமாக 1993இல் வந்த படம் உள்ளே வெளியே. ஐஸ்வர்யா, செண்பகம் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். ஏராளமான ஆபாச வசனங்கள், காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தபோதிலும் பார்த்திபனின் குறும்புத்தனமான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக படமும் வெற்றி பெற்றது.
கெட்ட போலீசாக வரும் பார்த்திபன் ஆரம்பத்தில் பல்வேறு கலாட்டாக்களை செய்ய பின்னர் மனம் திருந்தி கெட்டவர்களுக்கு எதிராக சாட்டையெடுப்பது தான் படத்தின் ஒன்லைன். அந்த வகையில் உள்ளே வெளியே படத்தினை மையக்கருவை அடிப்படையாக வைத்து தான் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் டெம்பர் உருவாகியிருந்தது. டெம்பர் படம் தமிழில் விஷால் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீஸ் சமயத்தில் பார்த்திபன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பொன்னுமணி
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக், செளந்தர்யா, சிவக்குமார் உள்பட பலர் நடித்து கிராமத்து பின்னணியில் காதல் கலந்த குடும்ப படமாக உருவாகியிருந்த பொன்னுமணி 1993இல் வெளியானது. தெலுங்கு ஹீரோயினான செளந்தர்யாவுக்கு தமிழில் இது அறிமுக படமாகும்.
கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் கார்த்திக்குக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டானதுடன் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் பாடல்களாக மாறின.
