விவசாயிகளுக்கு ராஜவிருந்து.. ஓடோடி வந்த விஜய்.. நிகழ்வுக்குப்பின் கிரைம் லிஸ்டில் இல்லாத மா.செ.வை தேர்வு செய்யும் விஜய்
விவசாயிகளுக்கு ராஜவிருந்து.. ஓடோடி வந்த விஜய்.. நிகழ்வுக்குப்பின் கிரைம் லிஸ்டில் இல்லாத மா.செ.வை தேர்வு செய்யும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கான விருந்து முடிவு அடைந்ததும் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய். அதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவளிக்கவும் இல்லை. அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது தெளிவாகத் தெரிந்தது.
தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை:
அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய மூன்றே நாட்களில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடந்தது.
அதில் பேசிய விஜய் திராவிடமும் தமிழ்த்தேசியமும் தனது இரு கண்கள் என்றும், பிறப்பால் அனைவரும் சமம் எனவும், நம்முடன் பங்கு சேரும் கூட்டணி கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் எனவும், இறை நம்பிக்கைக்கு எதிரானவர்கள் தாங்கள் அல்ல என்றும் தெரிவித்தார். த.வெக தலைவர் விஜய்யின் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியது.
விவசாயிகளுக்கு விருந்து அளித்த விஜய்:
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் விருந்தளிக்கப்படுகிறது. இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் அலுவலகத்துக்கு வந்து அடைந்தார். அதன்பின் விவசாயிகளை ஆரத்தழுவி வரவேற்ற விஜய் அவர்களுடன் பேசி வருகிறார். இந்த விருந்து உபசரிப்பு நிறைவடைந்தபின், மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனை நடக்கிறது. ஆனால், அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்குபெறும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை. குறிப்பாக விழுப்புரம் மாவட்ட தற்காலிக தலைவர், மாநாட்டுக்கு பொறுப்பு பணியாற்றிய விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தயிருக்கிறார், விஜய்.
விவசாயிகள் அனைவரையும் அனுப்பிவைத்தபின், இந்தக் கூட்டம் நடக்கயிருக்கிறது. மேலும் மாவட்டச் செயலாளர்கள் யாருக்கெல்லாம் குற்றப்பின்னணி கிடையாது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னதாகவே, முன்னணி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, குற்றப்பின்னணி இல்லாத மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வார் விஜய் என இக்கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்