'கர்த்தருக்குள் நித்திரை அடைந்த லொள்ளு சபா ஆண்டனி'- நண்பனின் இழப்பை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான லொள்ளு சபா மூலம் பெயர் பெற்ற ஆண்டனி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான லொள்ளு சபா மூலம் பெயர் பெற்ற ஆண்டனி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இந்தத் தகவலை ஆண்டனிக்கு கடைசி காலத்தில் பல உதவிகள் புரிந்து வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: லொள்ளு சபா டூ கோலிவுட் ஸ்டார்.. சந்தானத்தின் சாதனை பாதை..
உடல்நலக் குறைவு
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த ஆண்டனி, பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக அவர் தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். அவருக்கு தேவையான உதவிகளை நடிகர் சந்தானம் உட்பட பல லொள்ளு சபா நடிகர்களும், மக்களும் செய்து வந்தனர். இதற்காக, பழனியப்பன் பல இடங்களில் உதவி கேட்டும் திரிந்துள்ளார். அத்துடன் ஆண்டனிக்கு உதவி கோரி பலமுறை வீடியோவும் வெளியிட்டு வந்தார்.
கர்த்தருக்குள் நித்திரை
இப்படியான சூழலில், ஆண்டனியின் உடல்நலம் மிகவும் மோசமாகி இன்று சென்னையில் உயிரிழந்தார். இதனை சீரியல் நடிகர் பழனியப்பன் அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அந்தப் பதிவில், "நண்பர் லொள்ளு சபா ஆண்டனி இன்று அதிகாலை கர்த்தருக்குள் நித்திரை இடத்தார் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். சென்று வா நண்பா" எனக் குறிப்பிட்டு அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
லொள்ளு சபா
தமிழில் ரியாலிட்டி ஷோக்களுக்காக பெயர் பெற்ற தொலைக்காட்சி தான் விஜய் டிவி. இந்த டிவி தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்து வந்தது. அதில் 90'ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி லொள்ளு சபா.
தமிழ் படத்தின் முன்னோடி
தமிழில் வெளியாகி கொண்டாடப்பட்ட பல படங்களை ட்ரோல் செய்து வெளியான நிகழ்ச்சி தான் லொள்ளு சபா. அதுவும் சாதாரணமாக வாய் வார்த்தையால் கிண்டல் செய்வதில்லை. அந்தந்த கதாப்பாத்திரங்களாகவே மாறி, நடித்து மக்களை ரசிக்க வைப்பர். இந்த நிகழ்ச்சி தான் மெர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம், தமிழ் படம் -2க்கு எல்லாம் முன்னோடி.
தமிழ் சினிமா பிரபலங்கள்
இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தான் தற்போது கோலிவுட்டில் கொண்டாடப்பட்ட சந்தானம், யோகி பாபு, ஜீவா, லொள்ளு சபா மனோகர், ஸ்வாமிநாதன் போன்றோர் எல்லாம். இந்த நிகழ்ச்சியில் நடித்த சேஷூ, சிரிக்கோ உதயா, மாறன், ஜாங்கிரி மதுமிதா, ஆண்டனி போன்றோரும் சினிமாவில் நடித்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாமல் போனது.
மேலும் படிக்க: லொள்ளு சபா புகழ் நடிகர் சேஷூ மாரடைப்பால் மரணம்..
அடுத்தடுத்த மரணம்
சில நாட்களுக்கு முன், லொள்ளு சபா மூலம் பிரபலமான நடிகர்கள் சேசுவும், சிரிக்கோ உதயாவும் உடல் நலக் குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சிரிக்கோ உதயா சர்க்கரை நோயால் ஒரு கால் எடுக்கப்பட்டு போராடி உயிரிழந்தார். இப்படி, தாங்கள் திரையில் பார்த்து கொண்டாடிய கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது.
