Kevi Movie: ‘மண்டேலா’ ஷீலா, ஜாக்குலின் நடிக்கும் ‘கெவி’ - இயக்குநர் பேட்டி!
ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கும்போது,எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது
ஆத்யக் புரொடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கெவி'. தமிழ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மண்டேலா, பேட்டைக்காளி புகழ் ஷீலா ராஜ்குமார் மற்றும் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அறிமுக நடிகர் ஆதவன் இந்த படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் படத்தில் வில்லனாக நடித்த சார்லஸ் வினோத், தர்மதுரை புகழ் திருநங்கை ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் உமர் ஃபரூக், விவேக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் மலையாளத்தில் ’வே ஃபாரர்’ என்ற படத்திலும் நடித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை, தேன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய ராசி தங்கதுரை இந்த படத்தின் வசனங்களை எழுதி உள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை ஜெகன் ஜெயசூர்யா கவனிக்க, ஏ.ஆர் ரகுமான், அனிருத் ஆகியவரின் ஆர்கெஸ்ட்ராவில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அஸ்வத் நாராயணன் மேற்கொள்கிறார்.
இந்த படம் பற்றி இயக்குநர் தமிழ் தயாளன் கூறும்போது, "கெவி என்பதற்கு அடிவாரம் அல்லது பள்ளம் என்று பொருள். மலை எப்போதுமே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் இன்னொரு இருட்டு பக்கம் யாருக்கும் தெரியாது. இத்தனை ஆண்டு கால தமிழக வரலாற்றில் எத்தனையோ ஆட்சிகள் மாறி இருக்கின்றன. எத்தனையோ விஷயங்கள் மாறி உள்ளன. ஆனால் இந்த மலைப்பகுதியில் இன்னும் மாறாத விஷயங்கள் இப்போதும் தொடர்ந்து வருகின்றன; இதை மையப்படுத்தி இந்த படம் ஒரு முக்கிய சமூக பிரச்சினையை பேசுகிறது.
ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கும்போது எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது; அவர்களுடைய வலியை அருகில் இருக்கும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை சினிமா மூலமாக வெகுஜனத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும்போது ஏதாவது மாற்றம் நிகழ்ந்து விடாதா என்கிற நோக்கில் தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்த படத்தில் மலை கிராமத்து பெண்ணாக ஷீலா ராஜ்குமாரும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்குலினும் நடித்துள்ளனர். இந்த இருவரும் சேர்ந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு இக்கட்டான சூழலை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை விறுவிறுப்பு கலந்து கூறியுள்ளோம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பின்போது புயல், மழை, கடும் குளிர் என வெவ்வேறு சீதோஷ்ண பிரச்சினைகளையும் எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். குறிப்பாக இரவு நேர படப்பிடிப்பின்போது குளிர் தாங்காமல் நடிகை ஷீலா ராஜ்குமார் மிகப்பெரிய அளவில் சிரமப்பட்டார்.
பனியில் அவரது கை கால்கள் விரைத்துக்கொண்டு விட, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை நடந்தே தூக்கிச் சென்று சிகிச்சை அளித்து குணப்படுத்தினோம். அதன்பிறகு மீண்டும் வந்து படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்.
அதேபோல படத்தின் நாயகன் ஆதவன் இந்தப்படத்திற்காக இரண்டு வருடம் வேறு எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் கடுமையான அர்ப்பணிப்புடன் உழைத்தார். படப்பிடிப்பு நடக்கும் லொக்கேசன்களுக்கு முன்கூட்டியே சென்று அந்த பகுதி மக்களின் வாழ்வியல் நடைமுறைகளுடன் பழகி, அவற்றை தனது நடிப்பில் பிரதிபலித்துள்ளார். “ என்று கூறியுள்ளார்.
டாபிக்ஸ்