‘கோபி சுதாகர் மேல எனக்கு என்ன பொறாமை? நான் ஏன் அவங்க வளர்ச்சிய தடுக்க போறேன்?’ - ஈரோடு மகேஷ்
பரிதாபங்கள் கோபி சுதாகரின் வளர்ச்சியை நான் தடுக்கவில்லை. அவர்கள் மீது எனக்கு எந்த பொறாமையும் கிடையாது என விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இண்டெர்நெட் வளர்ச்சி வெடித்த சமயத்தில் சில புதுமைகளை மக்கள் ரசிக்கத் தொடங்கினர். அதில் ஒன்று தான் யூடியூப் சேனல்கள்.
ஆரம்பத்தில் செல்போனில் இருக்கும் ஸ்டோரேஜ் பற்றாக்குறையை சமாளிக்க உதவிய யூடியூப் சேனல்கள், பின்னாளில் மக்களை மகிழ்விக்கும் சாதனமாக மாறியது.
மெட்ராஸ் சென்ட்ரல்
டெம்பிள் மங்கீஸ் யூடியூப் சேனல் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த யூடியூப் சேனல்களும் உருவாகின. அதில் ஒன்று தான் மெட்ராஸ் சென்ட்ரல். அரசியலும் நையாண்டியும் மக்கள் தேடும் காமெடியும் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றால் அதனை மக்கள் வேண்டாமென்றா சொல்வார்கள் அல்லது அதனை ஏற்காமல் விட்டுவிடுவார்களா?
மெட்ராஸ் சென்ட்ரல் எனும் பேனரின் கீழ் வெளியாகும் இவர்களது வீடியோவை பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது. இதனால் யார் இந்த மெட்ராஸ் சென்ட்ரல் பசங்க எனும் பேச்சு அடிபடத் தொடங்கியது.
அசிங்கப்பட்டு வெளியேறிய நண்பர்கள்
அப்போது தான் கோபி, சுதாகர் எனும் பெயர் அனைவருக்கும் பரிட்சையமானது. இவர்கள் இருவரும் கல்லூரி காலம் தொட்டு நண்பர்களாக இருந்தனர் என்றும், தங்களின் திறனை நிரூபிக்க விஜய் டிவியில் வாய்ப்பு கேட்டு அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றதும் அங்கு நடுவர்களாக இருந்த ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி போன்றோரால் அவமானப்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
கிளம்பிய எதிர்ப்பு
இந்த விஷயங்கள் எல்லாம் வெளியே வர வர கோபி சுதாகருக்கு அதிக ஆதரவும் விஜய் டிவிக்கு எதிர்ப்பும் கிளம்பியது. இந்த பேச்சுகள் அவ்வப்போது எழுந்து வந்தாலும், கோபி சுதாகர் அந்த விஷயத்தில் இருந்து வெளியேறி அடுத்தடுத்த வேளைகளில் இறங்கினர். இப்போது பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கலாட்டி யூடியூப் சேனலுக்கு ஈரோடு மகேஷ் பேட்டி ஒன்று அளித்தார். அதில், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
எனக்கு என்ன பொறாமை
அந்த பேட்டியில், எனக்கு அவங்க மேல என்ன பொறாமை. அவங்ககிட்ட இருந்து பணத்த திருடுனேனா இல்ல, அவங்க சேனல எதாவது சொன்னேனா? அதெல்லாம் எதுவும் இல்ல.
அந்த நேரத்துல அந்த மேடையில அவங்க நல்லா அவங்களோட பங்களிப்பை கொடுத்திருந்தா அவங்க ரெண்டு பேரும் அடுத்தகட்டத்துக்கு போயிருப்பாங்க. அப்படி பண்ணலன்னா அவங்க ரிஜெக்ட் ஆகிருப்பாங்க.
குரேஷிக்காக பேசுனேன்
உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா கலக்க போவது யாரு சீசன் 5ல குரேஷி செமி பைனல் முடிச்சி பைனலுக்கு போக வேண்டியது. ஆனா, அங்க இருந்த சிலருக்கு குரேஷியோட பங்களிப்பு பிடிக்கல. அதனால அவர செலக்ட் பண்ணல.
அந்த சமயத்துல குரேஷிய எனக்கு யாருன்னே தெரியாது. ஆனா அவருக்காக நான் பேசுனேன். அவர் பைனலுக்கு போய் டைட்டில் வின்னர் ஆனாரு. அன்னைக்கு வந்த அத்தனை பேருலயும் குரேஷி தன்னோட வேலைய நல்லா பண்ணுனாரு அதனால அவருக்கு நான் துணையா நின்னேன்.
இதான் நான்
சமீபத்துல கூட கோபியையும் சுதாகரையும் நான் ஒரு நிகழ்ச்சியில சந்திச்சேன். அவங்க ரெண்டு பேரும் நல்லா பண்றாங்கன்னு சொல்லி கட்டிப் பிடிச்சு வாழ்த்திட்டு வந்தேன். இதுதான் நான். வெளிய இருந்து பாக்குறவங்களுக்கு இதையெல்லாம் நிரூபிச்சிட்டு இருக்க முடியாது.
நாங்க நடுவர்களா இருக்கும் போது யாருக்கும் மார்க் போட மாட்டோம். எல்லாரும் பேசி முடிவு பண்ணி ஒருத்தர மட்டும் நிகழ்ச்சிக்கு டைட்டில் வின்னரா கொண்டு வருவோம்ன்னு பேசிகுறாங்க. ஆனா அது உண்மை இல்ல. ஒவ்வொருத்தரும் மார்க் போடுவோம். எல்லாத்துக்கும் ரெக்கார்டு இருக்கு. இன்னைக்கு நாம போய் பாத்தாலும் எல்லாத்துக்கும் ரெக்கார்டு இருக்கும் எனப் பேசியுள்ளார்.
டாபிக்ஸ்