Vijay Sethupathi: உருண்டு வந்த உள்ளரசியல் - ‘அப்படியே நொறுங்கிட்டேன்; அந்தப்படத்த ஆஸ்கருக்கு அனுப்பிட்டாங்க..’ - விஜய்!
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு பதிலாக, ரன்வீர் சிங் நடித்த கில்லி பாய் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட போது, என் நெஞ்சமே நொறுங்கி விட்டது.
இந்தியா சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து வரும் இவர், கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
தற்போது கத்ரீனா கைஃப் - உடன் இணைந்து மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தொடர்பான உரையாடல் ஒன்றில் விஜய்சேதுபதி சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத போது நெஞ்சமே உருகுலைந்து விட்டது என்று பேசி இருக்கிறார்.
இது குறித்து பாலிவுட் ஹங்காமா சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் “ சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறாத போது நான் மிகவும் வருந்தினேன்.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு பதிலாக, ரன்வீர் சிங் நடித்த கில்லி பாய் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட போது, என் நெஞ்சமே நொறுங்கி விட்டது. நான் அந்தப்படத்தில் நடிக்காமல் இருந்தாலும், அந்தப்படம் ஆஸ்கருக்கு செல்ல நான் விரும்பி இருப்பேன். உள்ளே ஏதோ நடந்து விட்டது. நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை" என்று பேசினார்.
விஜய்சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோரது நடிப்பில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார்.
இந்தப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற போதும், வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்தது. இந்தப்படத்திற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்