Vijay Sethupathi: மக்கள் கஷ்டப்பட்டு வரி கட்டுகிறார்கள்.. பான் கார்டுக்கான வெப்சைட்டில் தமிழை சேருங்க - விஜய் சேதுபதி
Vijay Sethupathi: அரசு தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்வது சவாலான விஷயம். பான் கார்டுக்கான வெப்சைட்டில் தமிழ் மொழியும் சேர்க்க வேண்டும் என விஜய் சேதுபதி கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தோன்ற சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதையடுத்து மதுரையில் நடந்த வருமான வரித்துறையினர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, பான் கார்டுகான இணையத்தளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதை செய்வதால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகள் தெரியாத மக்கள் எளிதில் அணுக முடியும் எனவும் கூறியுள்ளார்.
வருமான வரித்துறை செயல்முறை பாராட்டுக்குரியது
இதுதொடர்பாக விஜய் சேதுபதி பேசியதாவது, "நான் படிப்பை முடித்துவிட்டு ஒரு சார்ட்டெட் அக்கவுண்டன்டாக பணியாற்றியுள்ளேன். அரசு தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்வது சவாலான விஷயம். வருமான வரித்துறை, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கார்ட்டூன்கள் மூலம் பான் கார்டு விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கியுள்ளது பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் மக்கள் ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்போது, புதுப்பிப்புகளைத் தேடி அலைகிறார்கள். எனவே தகவல்கள் அவர்களுக்கு புரியும் மொழியில் இருந்தால் இது நடக்காது.
தமிழில் தகவல்கள் இருக்க வேண்டும்
பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது குறித்த தகவல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. அதனை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழிலும் வெளியிட்டால் எல்லோரும் பயனடைவார்கள். ஏனென்றால் வருமானவரித்துறையின் அனைத்து செயல்பாடுகளும் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அந்த அடிப்படையில் இந்த கோரிக்கையை நான் முன் வைக்கிறேன்.
இங்கு ஒரு விஷயம் பரபரப்பானதற்கு பிறகு தான் அது குறித்து நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம். ஆகையால் அதனை முன் கூட்டியே எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் செய்து விட்டால் சிறப்பாக இருக்கும்.
மக்களுக்கு பயன் தரும் சலுகைகள் தேவை
நமது உரிமைகளுக்காக அரசாங்கத்திடம் எப்படி கோரிக்கைகளை வைக்கின்றோமோ அதே போன்று நம்முடைய வரிகளை தவறாமல் அரசாங்கத்துக்கு கட்டுவதும் கடமை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அதே போல அனைவருமே மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து தங்களுக்கான வருமான வரியை கட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் பயன் தரும் வகையில் சலுகைகள் இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
வருமான வரியை தவறாமல் கட்டிய நபர் பிற்காலத்தில் ஏதேனும் இயலாமல் போகுமானால் அவரை கைவிடாது காப்பாற்றுகின்ற நடைமுறையும் அவசியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்" என்றார்.
விஜய் சேதுபதி படங்கள்
கடந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ், மகாராஜா, விடுதலை 2 ஆகிய படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களும் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் காந்தி டாக்ஸ் படம் வசனங்கள் இல்லாமல் சைலண்ட் திரைப்படமாக வரவுள்ளது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, அதீதி ராவ், சித்தார்த் யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்