Vijay Political Entry: ‘விஜய் அரசியலுக்கு வர முடியுமா? இந்த மாஸ் கொடுத்தே இவர் தான்’- இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்
Vijay Political Entry: நடிகர் விஜய்க்கு இவர் மாஸ் பிம்பம் கொடுக்கவில்லை என்றால் அவரால் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? என இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Vijay Political Entry: தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா, இலங்கை என பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு விருப்பமான நடிகர் என்றால் அது விஜய் தான். அப்படிப்பட்ட நடிகர், தான் இனி படங்களில் நடிக்கப் போவது இல்லை. முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம்
இதையடுத்து, அவர் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கி அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். பின் கட்சிக் கொடி, கட்சி பாடல் என அடுத்தடுத்து ரிலீஸ் செய்து கட்சியின் முதல் மாநாட்டையும் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
இதற்கிடையில், அவர் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு கருத்து தெரிவித்தும் வருகிறார். அவரது பேச்சும், செயலும் நாளுக்கு நாள் அனைத்து கட்சியினருக்கும் பேசுபொருளாக அமைந்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெற்ற மனிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அடிபட்டது. 90களின் பேர் சொல்லும் இயக்குநரான ஆர்.வி. உதயகுமார் தான் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
மாஸ் கொடுத்ததே இவர் தான்
இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர். சிவகாசி படமும், திருப்பாச்சி படமும் இல்லைன்னா இன்னுக்கு விஜய்யால கட்சி ஆரம்பிக்க முடியுமா? இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா போட்ட மியூசிக் எல்லாம் தாம் அவர மாஸ் ஹீரோவா மாத்திருக்கு. இந்தப் படம் எல்லாம் அவருக்கு இன்னைக்கும் பேர் தருது.
இதை எல்லாம் மத்தவங்க சொல்லக் கூடாது. நான் சொல்லலாம். ஏன்னா விஜய் என்னோட தம்பி. விஜய்யோட வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இசை. அதெல்லாம் இங்க பட்டைய கிளப்பும்.
ஸ்ரீகாந்த் தேவா பாருங்க. ஆளு எப்படி இருக்காரு. அவரு மனசு மாதிரியே பெருசு. பரந்த மனது, பரந்த உடம்பு, எல்லாரையும் பாராட்டனும், எல்லாரையும் வாழ்த்தனும்ன்னு நெனைக்குற ஆள் இவரு என ஸ்ரீகாந்த் தேவாவை பாராட்டி பேசியுள்ளார்.
வைரலாகும் பேச்சு
ஏற்கனவே, விஜய்யின் ஒவ்வொரு அசைவுகளும் அவர் குறித்த ஒவ்வொரு விமர்சனங்களும் தமிழக அரசியலிலும் சினிமாத் துறையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில், ஆர்.வி. உதயகுமாரின் இந்த பேச்சும் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. விஜய் தற்போது ஒரே சமயத்தில் அரசியலிலும் தனது கடைசி படத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
தளபதி 69
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் உள்ள ஹெச். வினோத் விஜய்யின் கடைசி படத்தை இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படம் தற்போது தளபதி 69 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில், மமிதா பைஜூ, பிரியாமணி, அஞ்சாதே நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், டிஜே அருணாச்சலம் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பகவந்த் கேசரி ரீமேக்?
இந்தப் படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக படத்தின் அப்டேட்களுக்கு காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில், தளபதி 69 படம் தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடியின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் எனவும், இந்தப் படத்தை இயக்க அனில் ரவிபுடியிடம் விஜய் அனுமதி கேட்டதாகவும் சமீபத்தில் விடிவி கணேஷ் பேசியது மிகவும் வைரலானது.
அதே சமயம், விஜய் அரசியலுக்கு வருவதால், இது நிச்சயம் அரசியல் சம்பந்தமானதாகவோ, அல்லது மக்கள் பிரச்சனைகள் பற்றிய படமாகவோ தான் இருக்கும் என்றும் இந்தப் படத்தில் விஜய் அரசியல்வாதி அல்லது போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையை செய்திகள்