Thalapathy Vijay: அட்லி பட அறிவிப்பால் குமுறும் விஜய் ரசிகர்கள்.. 2026க்கு பின் என்ன ஆகுமோ?
Thalapathy Vijay: இயக்குநர் அட்லி இன்று தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் எல்லாம் சோசியல் மீடியாக்களில் குமுறி வருகின்றனர்.

Thalapathy Vijay: நடிகர் விஜய், தற்போது அவரது 69 ஆவது படமான ஜன நாயகனில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அதே சமயம் அவர் அரசியல் நிகழ்வுகளிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தான் இயக்குநர் அட்லி இன்று தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அட்லி பட அறிவிப்பு
அந்த அறிவிப்பின் படி, இயக்குநர் அட்லி தன் இயக்கத்தில் உருவாகும் 6 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், அப்படத்தின் கதநாயகன் தெலுங்கு நடிகர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் என்பதும் தெரிய வந்துள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாகவும், சூப்பர் நேச்சுரல் கதை அம்சத்துடனும் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
சயின்ஸ் ஃபிக்ஷன் கதை
இந்த படத்திற்கு தற்காலிகமாக AA22 X A6 என பெயரிட்டுள்ளதாகவும், இந்தப் படத்தின் கதை இதுவரை எடுத்த சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளிலே மாறுபட்டு, மிகவும் ரசிக்கும் படி உள்ளதாகவும் வெளிநாட்டு விஎஃப் எக்ஸ் கலைஞர்கள் கூறியுள்ளனர். அத்துடன் அல்லு அர்ஜூனுக்கும் விஎஃப்எக்ஸ் தொடர்பான சில பரிசோதனைகளை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் ஒரு கிளிம்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
சினிமாவில் இருந்து விலகும் விஜய்
இந்த கிளிம்ஸ் வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் தங்களது ஏக்கத்தையும் குமுறலையும் சோசியல் மீடியாக்களில் தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம், விஜய் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ஜன நாயகன் படம் தான் எனது கடைசி படம். அதன் பின் நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். சினிமாவை விட்டு விலகி, முழுநேரமாக அரசியலில் கவனத்தை செலுத்தப் போகிறேன் என்றும் உறுதியாக கூறியிருந்தார்.
குமுறும் விஜய் ரசிகர்கள்
இதனால், தான் அட்லி தன் நெருங்கிய நண்பரான விஜய்யை விட்டுவிட்டு தற்போது அல்லு அர்ஜூனை வைத்து படம் எடுக்கிறார் என்றும், அட்லி தற்போது எடுக்கவுள்ள படம் விஜய்க்காக எழுதப்பட்ட கதை தான். ஆனால், அவர் நடிக்க மறுத்ததால் இந்தப் படம் அல்லு அர்ஜூனை வைத்து இயக்க உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
தனி ஆளா 1000 கோடி
இதுதொடர்பாக ஒரு எக்ஸ் பயனாளர் கூறும் போது, “விஜய் அண்ணாவா இருந்தா தனி ஆளாவே 1000 கோடி தூக்கி அடிப்பாரு. பரவாயில்ல.. அவருக்கு வேற ஐடியா இருக்கு என அவரை அவரே சமாதானம் செய்து கொண்டார்.”
மற்றொருவர், "அண்ணோவ்.. நீ இருக்க வேண்டிய இடம்யா" என விஜய்யை டேக் செய்து அழும் எமோஜியை பதிவிட்டிருக்கிறார். மேலும் இந்தப் பதிவில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட AA22 X A6 கிளிம்ஸ் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இனி என்ன பண்ண போறோமோ?
மற்றொருவர், " கம்பேக்கோ செட் பேக்கோ இல்ல. இனிமே எல்லாமே லுக்கிங் பேக் தான்" என விஜய்யின் முடிவை மதித்து ஜன நாயகன் படத்திற்காக காத்திருப்பதாக கூறினார்.
மேலும் ஒரு நபர், " விஜய் அண்ணனின் ரசிகர்கள் எல்லாருமே அட்லியின் பட அறிவிப்பால் சோகத்தில் உள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்குப் பின் இனி என்ன பண்ண போறோமோ?" எனக் கேள்வி எழுப்பினார்.
ஆளப்போறான் தமிழன்
இன்னும் ஒரு நபர், "அண்ணா நீ சினிமாவ விட்டு போகாதண்ணா.. எங்களால அத தாங்க முடியலன்னா" என விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மற்றொரு நபர் அட்லி விஜய் படத்திற்கு பெயர் வைத்து பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து விஜய் மற்றும் அட்லி கூட்டணியை மிஸ் செய்வதாக கூறியிருக்கிறார். அந்த வீடியோவில், விஜய் முதலமைச்சராக படத்தில் நடித்தால் அந்தப் படத்திற்கு நீங்கள் என்ன பெயர் வைப்பீர்கள் என கேட்டதற்கு 'ஆளப்போறான் தமிழன்' என அட்லி உடனடியாக பதில் தருவார்.
