12 Years of Naan: நடிகனாக நடித்த முதல் படம்..! கொலைகாரன், நல்லவன் என முத்திரை பதித்த விஜய் ஆண்டனி
இசையமைப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி நடிகனாக நடித்த முதல் படம் தான் நான். க்ரைம் த்ரில்லர் பாணியிலான இந்த படத்தில் கொலைகாரன், நல்லவன் என இரண்டு பரிணாமங்களில் நடிப்பில் முத்திரை பதித்த விஜய் ஆண்டனியின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான பாடல்களில் ரசிகர்களை கவர்ந்து வந்த இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி, ஹீரோவாக அறிமுகமான படம் நான். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்கியிருப்பார்.
ஹாலிவுட் படமான தி டேலண்டட் மிஸ்டர். ரிப்லே என்ற படத்தின் கரு அடிப்படையாக கொண்டு இந்த படம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இன்னொருவரின் அடையாளத்தை சுமக்கும் குற்றவாளி
சிறு வயதில் குற்றம் செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படிப்பை முடித்து வெளியேறும் விஜய் ஆண்டனி, விபத்து ஒன்றில் சிக்கி இன்னொரு நபரின் அடையாளத்தை பெறுகிறார். அந்த நபர் போலவே வாழ்ந்து வரும் அவர் எதிர்பாராத விதமாக தனக்கு அடைக்கலம் கொடுத்த நண்பனை கொலை செய்ய நேர்கிறது. ஏற்கனவே குற்றவாளியாக இருந்த விஜய் ஆண்டனி இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் பாணியில் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
படத்தில் ரூப மஞ்சரி, அனுயா பகவத், விப நடராஜன் என்று மூன்று நாயகிகள் நடித்திருப்பார்கள். ஆனால் இவர்களில் யாரும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக வரமாட்டார்கள். அத்துடன் படத்தில் டூயட் பாடல்கள் எதுவும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நண்பனாக சித்தார்த் வேணுகோபால், செட்டப் அப்பாவாக கிருஷ்ணமூர்த்தி நடித்திருப்பார்கள்.
நடிப்பில் முத்திரை பதித்த விஜய் ஆண்டனி
முதல் படத்திலேயே சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் ஆண்டனி, நடிப்பிலும் முத்திரை பதித்தார். முதல் பாதியில் மிகவும் அமைதியான, சாந்தமான நபராக வரும் விஜய் ஆண்டனி, இரண்டாம் பாதியில் கொலையாளியாக உள்ளூற இருக்கும் டென்ஷனை வெளிக்காட்டாமல், எவ்வித பதட்டமும் இல்லாமல் கேஷுவலான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டலை வாங்கியிருப்பார்.
போலீசிடம், மற்றவர்களிடம் விஜய் ஆண்டனி தப்பிக்கும் விதம் சீட் எட்ஜ் அனுபவத்தை தரும் விதமாக பரபரப்பான காட்சிகளுடன் விறுவிறுப்புடன் திரைக்கதையும் அமைந்திருக்கும்.
இசையிலும் கலக்கல்
இந்த படத்துக்கு இசையமைப்பு பணியையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டார். படத்தின் முக்கிய பாடலாக இருக்கும் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலை எழுதுவதற்கான பாடலாசிரியை வித்தியாசமான முயற்சியில் தேர்வு செய்தார்.
அந்த பாடலுக்கான தத்தகாரத்தை வெளியிட்டு அதற்கு ஏற்பட பாடல் வரிகளை எழுதும் போட்டியை நடத்தி அதிலிருந்து பாடலாசிரியரை தேர்வு செய்தார். அப்படிதான் ஆஸ்மின் என்ற பாடகர் தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல் படத்தில் இடம்பிடித்த மற்றொரு பாடலான மக்காயால மக்காயால பாடல் ஹிட்டடித்ததுடந் சிறந்த கிளப் பாடலாக இருந்து வருகிறது.
நல்ல வரவேற்பு
நான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், விமர்சிக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. பெங்காலி மொழிில் அமானுஷ் 2, கன்னடாவில் அஸ்திட்வா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி கேரக்டர் பெயர் சலீம் ஆகும். அதே பெயரில் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வெற்றி பெற்றது.
நான் படத்தின் டேக் லைன் ஆக No one is perfect என குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றார் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஹீரோ எப்படி பயன்படுத்தி கொள்கிறான் என்பதை கூறும் கதையாக படம் உருவாக்கப்பட்டிருக்கும்.
நடிகனாக முதல் படத்திலேயே வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி தற்போது கோலிவுட் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் நான் படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்