Viduthalai Review: தேறினாரா சூரி? ‘விடுதலை’ யாருக்கு? ‘நெற்றிப் பொட்டு’ ரிவியூ!
Viduthalai Part 1 Review: வெற்றி மாறனின் படம் என்பதற்கான அனைத்து விசயங்களும் இருக்கிறது. அதோடு, டாக்குமெண்ட்ரி ஸ்டைலும் கலந்திருக்கிறது. இது விருதுகளை தரலாம், டிக்கெட்டிற்கான விலையை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Viduthalai Movie Review :
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது விடுதலை திரைப்படம். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார். வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார்.
இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
கதையின் கரு
அருமபுரி பகுதி காட்டில் உள்ள கனிம வளங்களை எடுக்க தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி அளிக்கும் அரசு, ஒரு குறிப்பிட்ட தேதியில் பணிகளை ஆரம்பித்து கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு உறுதி அளிக்கிறது. ஆனால் காடுகளில் உள்ள வளங்களை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து, ‘மக்கள் படை’ என்ற அமைப்பு குறுக்கே நிற்கிறது.
அவர்களை அடக்கி ஒடுக்க வழக்கம் போல கொடூரமான வன்முறையை கையில் எடுக்கிறது காவல் துறை. காவல்துறையை எதிர்க்க மக்கள் படையும் வன்முறையை கையில் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல்களே விடுதலை படத்தின் கதை.
போலீஸ் படையில் நேர்மை தவறாத கான்ஸ்டபிளாக வரும் குமரேசன் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். உண்மையில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் வேலைகளை செய்யும் அவரது உடல் மொழியும், நேர்மையின் பக்கம் நிற்கும் அவரது திமிரும் நிஜ போலீஸ் காரரை கண்முன் நிறுத்துகிறது. மக்கள் படை தலைவன் வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். வெற்றிமாறனின் டைரக்ஷனில் கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிகிறார் விஜய் சேதுபதி. வழக்கம் போல எந்த வித பதற்றமும் இல்லாதஅவரின் நடிப்பு சிறப்பு.
உயர் அதிகாரிக்கான அச்சு அசல் உருவமாக ராஜீவ் மேனன். அதிகாரத்தை வைத்து காய்களை நகர்த்தும் அந்த கதாபாத்திரத்தில் ராஜீவ் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு அல்டிமேட் ரகம். இரக்கமற்ற போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் மிரட்டி இருக்கிறார். பழங்குடி பெண்ணாக வரும் பவானி சூரியுடனான காதல், காவல்நிலையத்தில் காவல்துறையினரால் அனுபவிக்கும் சித்ரவதை என பல இடங்களில் நடிப்பில் வாவ் சொல்ல வைக்கிறார். சூரிக்கும் இவருக்கும் இடையேயான காதலிலும் அவ்வளவு ஆழம் இருந்தது. படத்தில் வரும் இன்ன பிற அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்.
போலீஸ் வேலை, அதற்குள் இருக்கும் சிக்கல், அதிகாரதுஷ்பிரயோகம், காவல்துறைக்குள் நடக்கும் அரசியல் என அனைத்தையும் அவ்வளவு டீட்டெய்லாக காட்சி படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். வழக்கம் போல வெற்றிமாறனின் படத்தில் இருக்கும் ரானஸ் இந்த படத்திலும் இருக்கிறது. கதாபாத்திரங்களுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் படத்தின் பெரும்பலமாய் நிற்கிறது. தேவைப்படும் இடத்தில் பின்னணி இசையையும், பெரும் பான்மையான இடங்களில் அட்மாஸ்பியர் இசையையும் பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார் இளையராஜா.
படத்தின் பல காட்சிகள் நாம் எவ்வளவு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறுமுறை மறுமுறை நியாபக படுத்திக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக க்ளைமேக்ஸில் விசாரணை என்ற பெயரில் பெண்களின் மீது காவல்துறை நடத்தும் வன்முறையாட்டம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
இதற்கிடையே காவல்துறையில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். சூழ்நிலையாலேயே அவர்கள் அப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையும் ஆங்காங்கே தெளிவு படுத்திருக்கிறார் வெற்றிமாறன்.
படத்தில் காட்சிகள் வழியாக கதை சொல்வதற்கு பதிலாக வாய்ஸ் ஓவர் மூலமும், உரையாடல் மூலமும் காட்சிகளை நகர்த்தி இருப்பது டாக்குமெண்ட்ரி பார்ப்பது போல ஃபீலை கொடுத்தது. இருப்பினும் அதிகாரத்திற்கு எதிராக வெற்றிமாறன் வைத்திருக்கும் கேள்வி நிச்சயம் கேட்கப்பட வேண்டியதே!
டாபிக்ஸ்