Vidaamuyarchi 1st Day Collection: அஜித்தின் துணிவு படத்தை விட குறைவான வசூல்! விடாமுயற்சி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
Vidaamuyarchi 1st Day Collectio: அஜித்குமார் நடித்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான விடாமுயற்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் அவரது முந்தையை படமான துணிவு படத்தை காட்டிலும் குறைவாகவே வசூலித்துள்ளது.

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் விடாமுயற்சி மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 6ஆம் தேதி (நேற்று) வெளியாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் அஜித்குமாரின் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்துடன் வரவேற்றனர்.
1997இல் வெளியான ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தழுவலாக விடாமுயற்சி படம் உருவாகியுள்ளது. அத்துடன், லாஸ்ட் சீன் அலைவ் என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தின் கதை, காட்சிகளும் பட்டி டிங்கரிங் செய்து விடாமுயற்சி படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
விடாமுயற்சி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
அஜித்குமார் மற்ற படங்களை போல் விடாமுயற்சி படத்துக்கும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இருப்பினும் அவரது முந்தைய படமான துணிவு முதல் நாள் வசூலை முந்தவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த தகவலை வெளியிடும் Sacnilk.com இணையத்தில் கூறப்பட்டிருக்கும் தகவலின்படி, விடாமுயற்சி படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 22 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ரூ. 21.5 கோடி, தெலுங்கு மாநிலங்களில் ரூ. 50 லட்சம் வசூல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன், காலையில் 58.81%, மதியம் 60.27% மற்றும் மாலை காட்சிகளுக்கு 54.79% என திரையரங்குகளில் கூட்டம் கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்துக்கு முந்தைய அஜித்தின் படமான துணிவு படம் ரிலீஸ் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 24.4 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தை ஒப்பிடுகையில் விடாமுயற்சி படத்தின் வசூல் குறைவுதான் என சொல்லப்படுகிறது.
இருப்பினும் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த தகவல் படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் பிப்ரவரி 7ஆம் தேதி காலை வரை வெளியிடவில்லை. அவர்கள் வெளியிடும் பட்சத்தில் விடாமுயற்சி உலக அளவில் முதல் நாளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது தெரியவரும்.
அத்துடன் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கையில் எதிர்வரும் நாள்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் காட்சியை பார்த்த த்ரிஷா
விடாமுயற்சி படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்திருக்கும் த்ரிஷா, படத்தின் முதல் நாள் காட்சியை திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். இதேபோல் படத்தில் நடித்திருக்கும் இன்னொரு நடிகையான ரெஜினாவும், த்ரிஷாவுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு மத்தியில் த்ரிஷா, ரெஜினா ஆகியோர் இருப்பது போல் வீடியோ காட்சிகள் உள்ளன.
விடாமுயற்சி படம்
அஜர்பைஜானில் தனது காதல் மனைவியை கடத்திய கும்பலிடமிருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாத்துகிறார் என்ற ஒன்லைன் கதையை கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ், யோகி பாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - அனிருத், ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்.
ஹாலிவுட் தரத்தில் படத்தின் மேக்கிங் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதேபோல் சினிமா பிரபலங்களும் படம் சிறப்பாக இருப்பதாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

தொடர்புடையை செய்திகள்