Rajini Kanth: ‘சேட்டன் வந்நல்லே.. சேட்டை செய்யான் வந்நல்லே’: வேட்டையன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!
Rajini Kanth:‘சேட்டன் வந்நல்லே.. சேட்டை செய்யான் வந்நல்லே’ - வேட்டையன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Rajini Kanth: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்தார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார்.
'வேட்டைன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்ஷன் உள்படப் பலரும் நடித்துள்ளார்கள்.
வேட்டையனின் வளர்ச்சியில் ரஜினி:
’’வேட்டையன்’’ படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்கள்.
அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர்.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கினை மேற்கொண்டார்.
வேட்டையன் ரிலீஸ் தேதி:
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றபோது, ஆன்மிகத் துறவியிடம் ரஜினிகாந்த் உரையாடல் நடத்தும் வீடியோ வெளியானது. அதில் ’வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரஜினிகாந்த் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.
அதன்படி, படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அவர் துறவியிடம் தெரிவித்தார். அதையே தான் படக்குழு தற்போது உறுதிசெய்திருக்கிறது. அக்டோபர் 12ஆம் தேதி தசரா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாள்கள் முன்னரே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல்:
இந்நிலையில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘மனசிலாயோ’ என்னும் பாடல், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகி செம ஹிட்டானது. குறிப்பாக, இப்பாடலில் தமிழும் மலையாளமும் கலந்து வந்துள்ளதால் ஓணத்தைக் கொண்டாடிய மலையாளிகள், இப்பாடல் வரிகளை எடுத்து ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் வேட்டையன் படத்தைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், வரும் செப்டம்பர் 20ஆம் தேதி, சென்னையில் உள்ள நேரு அரங்கில் படத்தின் பாடல் மற்றும் பிரிவியூ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதனால், ரஜினியின் பேச்சைக் கேட்க, அவரது ரசிகர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
டாபிக்ஸ்