Vetrimaaran: ‘மொத்தம் 60 நாள்; பாலு சாரோட டாய்லெட்டை கூட கழுவி.. உன்னால எப்படிடான்னு..’ - வெற்றிமாறன் நெகிழ்ச்சி!
Vetrimaaran: சிக்கலான காலகட்டத்தில், பாலு மகேந்திரா உடன் 60 நாள் தங்கி அவருடைய உடல் நலத்தை பராமரித்தார் துரை செந்தில் குமார் - வெற்றிமாறன் நெகிழ்ச்சி!

Vetrimaaran: நடிகர்கள் சூரி - சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வெற்றிமாறன் பேச்சு:
நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ‘’இயக்குநர் துரை செந்தில்குமார் - நடிகர் சூரி இணைந்து பணியாற்றும்போது 'கருடன்' படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது. 'அது ஒரு கனாக்காலம்' படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு உடல் நலமில்லை.
சிக்கலான காலகட்டத்தில், பாலு மகேந்திராவுடன் 60 நாள் அவருடனே தங்கி அவருடைய உடல் நலத்தை பராமரித்தார் துரை செந்தில் குமார். அவரை டாய்லெட் கூட்டிச் செல்வது, அவரின் கழிவுகளை அசுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் அவன் செய்தான். அப்போது அவனிடம் இது எப்படி உன்னால் முடிந்தது? என ஆச்சரியத்துடன் கேட்டேன்.
நம் தந்தைக்கு இப்படி ஏற்பட்டால்…:
அதற்கு 'நம் வீட்டில் நம் தந்தைக்கு இப்படி ஏற்பட்டால்.. என்ன செய்வோமோ.! அதைத்தான் நான் இங்கு செய்தேன்' என்றார். இதுதான் செந்தில். படப்பிடிப்பு தளத்தில் எந்தவித சிக்கலையும் உருவாக்காமல், இயல்பாகவும் அன்பாகவும் பழகக்கூடியவன். விடுதலை படத்திற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை தான் சூரியை சந்தித்து பேசி இருக்கிறேன்.
விடுதலை படத்தின் பணிகள் தொடங்கும் போது தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, என்னிடம் தயாரிப்பாளர் குமாரை அறிமுகப்படுத்தி 'கருடன்' என்று ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். செந்தில் தான் இயக்கவிருக்கிறார் என என்னிடம் சொன்ன போது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கதை விவாதம்:
செந்தில் என்னை சந்தித்து இப்படி ஒரு கதாபாத்திரம்... இப்படி ஒரு நடிகர்... என இந்தப் படத்தைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லிக் கொண்டே இருப்பான். கதை விவாதத்தின் போது ஆலோசனை சொல்வது போல், இதனை இப்படி செய்து கொள்ளலாம்.. அதனை அப்படி செய்து கொள்ளலாம்.. என்று நான் சொன்னேன்.
அதன் பிறகு ஆதி கதாபாத்திரத்திற்கு சசிகுமாரை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சொன்னபோது, முதலில் வியந்தேன். அவர் ஒப்புக் கொள்வாரா..! என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்போதும் அவர் சூரிக்காகத்தான் இந்த கதையை நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள்.
மனசு வேண்டும்:
அப்படி சொல்வதற்கும், அதை செய்வதற்கும் ஒரு மனசு வேண்டும். இதற்காக நான் சசிக்குமாரை மனதார பாராட்டுகிறேன். படம் பார்த்துவிட்டேன். படத்தில் சசிகுமாருக்கு அழுத்தமான வேடம். அது அவருக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல அனைவரும் இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் மூலம் கதைக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்திருக்கிறது. இந்த மாயாஜாலத்தை ஏற்படுத்திய சமுத்திரக்கனிக்கும் என்னுடைய பாராட்டுக்கள். படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
படத்தின் தயாரிப்பாளர்.. இயக்குநர் செந்தில் விவரித்ததை போல் சிறந்த தயாரிப்பாளரா.. என தெரியவில்லை. ஆனால் படைப்பின் மீது அக்கறை கொண்ட தயாரிப்பாளர் என்று மட்டும் தெரிய வருகிறது. அவருக்கும் இந்த படத்தின் மூலம் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.'' என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்